லெப்பா ஸ்வெடோஸரா ராடிக் .

தொழிலாளர் இயக்கங்களில் தீவிரமாக செயல்பட்டுவந்த தனது மாமா வ்ளதேதா ராடிக்கின் சமூகச் செயல்பாடுகள்
லெப்பாவை ஈர்த்தன.

யூகோஸ்லாவியா இளங்கம்யூனிஸ்டுகள் கழகத்தில் ( LEAGUE OF COMMUNIST YOUTH OF YUGOSLAVIA – SKOJ ) சேர்ந்து செயல்பட ஆரம்பித்தாள். தொடர்ந்து யூகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தபோது அவளுக்கு வயது பதினைந்தே பதினைந்து.

இரண்டாம் உலகப்போர் தொடங்கிற்று. ஜேர்மனிய ஹிட்லரின் நாஜி வெறியாட்டம் நாடுகள் கடந்தது.

1941 ஏப்ரல் 10 . யூகோஸ்லாவியா மீது நாஜி ஆதரவுப்படைகள் படையெடுத்து பல பகுதிகளைக் கைப்பற்றின.

‘சுதந்தர க்ரோஷிய தேசம் ‘ என்ற பெயரில் நாஜிகளின் கைப்பாவைகளின் அதிகாரம் நிலைநாட்டப்பட்டது.

எதிர்த்துப் போராடிய கம்யூனிஸ்டுகளும், பொதுமக்களும் அழித்தொழிக்கப்பட்டனர்.

லெப்பாவும் குடும்பத்தினரும்
‘ உஸ்தாஷே ‘ அமைப்பால்
கைது செய்யப்பட்டனர்.

ஒரு நிமிடம்…

‘உஸ்தாஷே’பற்றிச் சொல்லிவிடுகிறேன்! உங்களுக்கு வேறு அமைப்பு ஏதேனும் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல.

உஸ்தாஷே ஒரு க்ரோஷிய ஃபாசிஸ்ட் இயக்கம்.

அதன் மூன்று லட்சியங்கள் –

  1. ஃபாசிஸம் –
  2. மதம் – அதாவது அடிப்படை கிறிஸ்துத்வா –
  3. க்ரோஷிய தேசியம் – அதாவது ‘அகண்ட க்ரோஷியா’ ( GREATER CROATIA )

சரிதானே? லெப்பா கதைக்கு வருவோம்.

சிறையிலடைக்கப்பட்ட மறுமாதமே, தோழர்கள் உதவியுடன் – தங்கச்சி தராவுடன் சிறையிலிருந்து தப்பினாள் லெப்பா.

சிறை அவளைத் தளர்த்தவில்லை. முன்னிலும் தீவிரமாக ஃபாசிசத்தை எதிர்த்துப் போராடுவது என்று முடிவெடுத்தாள்.

யுகோஸ்லாவியன் பார்ட்டிஸன் படையின் ஏழாவது கம்பெனிப்பிரிவில் ராணுவ வீராங்கனையாக இணைந்து போராடத் தொடங்கினாள்.

நெரேத்வா போர்க்களத்தில் காயமடைந்தவர்களை கெர்மெக் பகுதி மறைவிடத்துக்கு கொண்டுசெல்லும் பொறுப்பு லெப்பாவுக்கு அளிக்கப்பட்டிருந்தது.

‘பிரிஞ் யூஜென்’ என்ற ஜெர்மன் நாஜிகளின் மலைப்பிரிவு காலாட்படையுடன் நடந்த யுத்தத்தின்போது – நாஜிகளிடம் பிடிபட்டுவிட்டாள் லெப்பா.

‘பொசன்ஸ்கா க்ருப்பா’ பகுதியிலிருந்த நாஜிகளின் இடத்துக்கொண்டு செல்லப்பட்ட
அந்த இளங்குருத்தை பலநாள்கள் அடைத்துவைத்து சித்ரவதை செய்து சீரழித்தார்கள் நாஜிகள் – விசாரணை என்ற பெயரில்.

‘விசாரணை’ முடிவில் – அவளுக்குத் தூக்குத்தண்டனை வழங்குவதாக அறிவித்தார்கள்.

அந்த நாளும் வந்தது.

  1. பிப்ரவரி 8.

“ஏய் கம்யூனிஸ்டுக் குட்டிப்பெண்ணே!
உனக்கு உயிர்ப்பிச்சை கொடுக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது! ஒப்புக்கொள்கிறாயா?”
என்று கேட்டான் நாஜி அதிகாரி.

என்ன என்பதுபோல அவனை ஏறிட்டுப்பார்த்தாள் லெப்பா.

“பெரிய கஷ்டம் ஒன்றுமில்லை. உன் கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்கள் தோழர்கள் யார் யார்? பெயரைமட்டும் சொல் போதும் ! உனக்கு உடனே விடுதலை…”

“அப்படியா?” வலிப் புன்னகையுடன்
கேட்டாள் லெப்பா.

“ஆமாம். ஹிட்லர் மீது சத்தியம்…”

” த்தூ….!”

காறி உமிழ்ந்தாள் லெப்பா.

” என் மக்களையும் இயக்கத்தையும் காட்டிக்கொடுக்கும் துரோகி என்று நினைத்தாயா நாஜிப்பயலே? நீ எவரெவர் பெயரைக் கேட்கிறாயோ – அவர்களெல்லாரும் என் மரணத்துக்கு வஞ்சம் தீர்க்க அவர்களாகவே உன்னிடத்துக்கு வருவார்கள். அப்போது அவர்கள் பெயர் உனக்குத் தெரியவரும். கடைசி நாஜிக் கோழையையும் அவர்கள் கொன்றுவிட்டுத்தான் திரும்புவார்கள்!”

என்று சிலிர்த்தாள்.

மொத்த நாஜிக்கூட்டமும்
மூச்சடைத்து நின்றது.

அவள் கழுத்தில் சுருக்குக்கயிற்றை இறுக்கினார்கள். மறுமுனையை மரக்கிளையில் மாட்டி மேலிழுக்கத் தொடங்கினார்கள்….

குரல்வளை முறியும்முன்
அவள் முழங்கினாள் :

“வாழ்க கம்யூனிஸ்ட் கட்சி!
வாழ்க பார்ட்டிஸன்ஸ்!
மக்களே உங்கள் சுதந்தரத்துக்காகப் போராடுங்கள்! தீமைக்கு ஒருபோதும் சரணடையாதீர்கள்! எனது மரணத்துக்கு நீதி கேட்க வருவார்கள் என் தோழர்கள்!”

அவ்வளவுதான்.

பொது இடத்தில் செத்துப் பிணமாகத் தொங்கிய அந்த கம்யூனிஸ்ட் யுவதியின்
சடலத்துக்கு வயது 17 !