இறுதி யுத்தத்தின் போது, தமிழ் மக்கள் எவருக்குமே, சிறுகாயங்கள் கூட ஏற்படாதவாறே, யுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக, யுத்தத்தை வழி நடர்த்தியவர்கள் கூறினார்கள். அதேவேளை, சுமார் 40,000 வரையிலான அப்பாவித் தமிழ்மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என, ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை கூறியது.
ஆனாலும், இலட்சம் தாண்டிய தமிழர்களது உயிர்கள் காவு கொள்ளப்பட்டு உள்ளன எனத் தமிழர் தரப்புகள் கூறுகின்றன. இது தொடர்பிலான சரியான தகவல்கள், ஆவணங்கள் அவர்களிடத்திலும் இல்லை. அத்தோடு, தமிழ்த் தரப்பு, இவ்வாறான தகவல்களைத் திரட்டுவதற்கான வேலைத் திட்டங்களையும் இதுவரை ஆரம்பிக்கவில்லை.
ஆகவே, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் போது, காவு கொள்ளப்பட்ட தமிழ் மக்களது உயிரிழப்புகள் தொடர்பிலான தகவல்கள் மிக முக்கியமானவை. மேலும், விழுப்புண் அடைந்தவர்களது விவரங்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களது விவரங்கள் ஆகியனவும் முக்கியமாக வேண்டப்படுபவை ஆகும். இவ்விடயத்தில், பளை பிரதேச சபையின் முன்மாதிரி முயற்சிகள், பெருமைக்குரியவை மட்டுமல்ல பாராட்டப்படவும் வேண்டியவை.
பல குடும்பங்களில், சில அங்கத்தவர்கள், போரின் போது கொல்லப்பட்டு உள்ளார்கள். சில குடும்பங்களில், தகவல்கள் வழங்குவதற்கே ஆள்களின்றி, ஒருவர்கூட மிச்சம் மீதியின்றி, முழுமையாகவே கொல்லப்பட்டு விட்டார்கள். ஆகவே, அவை தொடர்பில் உறவினர்கள், நண்பர்கள் தான், தெளிவானதும் விவரமானதுமான தகவல்களை வழங்க வேண்டும்.
இது இவ்வாறு நிற்க, இலங்கையில் தமிழ் மக்கள், இறுதி யுத்தத்தில் மட்டும் கொல்லப்படவில்லை. 1958ஆம் ஆண்டிலிருந்து கொல்லப்பட்டு வந்துள்ளனர். அதாவது, நாடு சுதந்திரம் கண்டு, பத்தாவது ஆண்டிலிருந்தே தமிழ் மக்கள் மீது முதலாவதும் பாரியதுமான கலவரம் கட்டவிழ்த்து விடப்பட்டது.
1958ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை, நடைபெற்ற இனவெறியாட்டத்தில் 1,500 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.
ஊரடங்குச் சட்டமும் அவசர கால நிலையும் அமுலில் இருந்த போதும், தமிழர்கள் மீதான வெறியாட்டம், தங்குதடையின்றி நடந்தேறியது. அது மட்டுமின்றி, மனித இனம் சந்திக்கக் கூடாத பல அசிங்கங்கள், இனவன்மத்துடன் அரங்கேற்றப்பட்டன.
லெம்கின் என்ற சட்டவியல் அறிஞர், இனப்படுகொலைக்கான விளக்கத்தை ‘Genocide – A Modern Crime’ என்ற தனது நூலில் பின்வருமாறு விவரித்து உள்ளார். ‘இனப்படுகொலை என்பது, ஒரு தேசத்தின் மக்கள் குழாமை, ஒரு தேசிய இனத்தை, முழுமையாக அந்நாட்டிலிருந்து, வெகுஜனப் படுகொலைகளால் அழிப்பதாகும். அத்துடன், இனத்தின் வாழ்வியலின் அத்தியாவசிய அத்திவாரங்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்ட, பல்வேறு நடவடிக்கைகளின் ஓர் ஒருங்கிணைந்த திட்டம் ஆகும்’ என விளக்குகின்றார்.
அதன் பிரகாரம், குறித்த மக்கள் குழாம் என்ற தேசிய இனத்தின் அரசியல், சமூக அமைப்புகள், கலாசாரம், மொழி, தேசிய உணர்வுகள், நம்பிக்கைகள், மதம், பொருளாதார இருப்பு, பாதுகாப்பு, சுதந்திரம், சுகாதாரம், கண்ணியம் போன்றவை உட்பட மற்றும் அத்தகைய தேசிய இனத்துக்குச் சொந்தமான தனிநபர்களின் வாழ்க்கையைப் பகுதியாகவோ, முழுமையாகவே இல்லாமல் செய்தல் ஆகும்.
ஆகவே, 1958ஆம் ஆண்டு தொடக்கம், 2009ஆம் ஆண்டு வரையிலான, சுமார் 60 ஆண்டு காலமாக இடம்பெற்ற, படுகொலைகளில் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை, கணக்கிடப்பட வேண்டும். அத்துடன், தென் பகுதிகளில் தமிழர்களின் பிரபல்யமான வர்த்தக நிலையங்களும் தொழிற்சாலைகளும் அழிக்கப்பட்டன. இந்தச் சொத்துகளுக்கான நட்டஈடுகள் வழங்கப்பட்டதாகவோ, அல்லது மீளவும் அந்தச் சொத்துகளைத் தமிழர்கள் பெற்றுக்கொண்டதாகவோ விவரங்கள் இல்லை. தமிழர்களை விரட்டிவிட்டு அபகரிக்கப்பட்ட சொத்துகள் அபகரிக்கப்பட்டதாகவே இன்றுவரை தொடர்கின்றன. இது தொடர்பான விவரங்களும் சேகரிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது.
“மூச்சு விடுவதற்கு ஓர் இடைவெளி தேவை; காட்டாட்சி தேவையில்லை” என்ற நிலைப்பாட்டிலேயே, 2015ஆம் ஆண்டு, நல்லாட்சி அரசாங்கத்துக்கு வாக்களிக்குமாறு, தமிழ் மக்களைக் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டது. அதனாலேயே, இரண்டு தடவைகளாக அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைத் தோற்கடித்து, முண்டு கொடுத்துக் காப்பாற்றியும் இருக்கின்றது.
இந்நிலையில், தமிழர் தரப்பு மூச்சு விட்டிருக்கக்கூடிய (?) கடந்த ஐந்து ஆண்டுகளில், இனஅழிப்பு தொடர்பான உயிரிழப்புகள் குறித்த தகவல்கள், கணக்கெடுப்பை மேற்கொள்ளாது, காலம் வீணடிக்கப்பட்டது ஏன்?
கூட்டமைப்பை விமர்சிப்பதே, தங்களது அரசியல் என அரசியல் நடத்துபவர்களும் இக்காரியங்களைக் கவனிக்கவில்லை. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில், பிரதான சுடர் ஏற்றுவதற்கு முண்டியடிக்கும் அரசியல் தலைவர்களோ, கட்சிகளோ இவ்விடயத்தில் பின்வாங்கியே இருந்து விட்டனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள், ‘எங்களுக்கு விடிவைத் தரப்போகின்றது’ என்ற, மாயத் தோற்றத்தில், கூட்டமைப்பின் தலைவர்கள், வெறுமனே காத்துக் கொண்டிருந்து விட்டார்கள். அவ்வாறே மக்களுக்கும் கானல் நீரைக் காட்டினார்கள்.
ஆற்ற வேண்டிய காரியங்கள், ஆயிரம் இருக்கையில், வீணாக ஐந்து ஆண்டுகளைக் கடத்தி விட்டோம். ஆட்சியாயளர்கள் எங்கள் ஆதரவைப் பெற்று, தங்கள் காரியங்களைச் சாதித்து, வெற்றிகரமாகக் (கஷ்ட)காலங்களைக் கடந்துவிடுகிறார்கள்.
‘காத்துக் கொண்டிருக்கும் போதே, பிறிதொரு வேலையைச் செய்து கொண்டிரு’ என்கிறார், அமெரிக்க நாட்டு எழுத்தாளர் ஏ.சி. ஹாலந்த. ‘எப்படிக் காத்துக் கொண்டிருப்பது என்பதே, வெற்றியின் இரகசியம்’ என்கிறார் ஜோர்ஜஸ் பர்டாலிக் என்ற பிரெஞ்சு நாட்டு எழுத்தாளர். ஆனால், யார் ஆட்சிக்கு வந்தாலும், வரலாற்றில் என்றுமில்லாதவாறு, தேசியக் கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்தினாலும், தமிழ் மக்களது அரசியல் அபிலாஷைகள் நியாயபூர்வமாகத் தீர்க்கப்பட மாட்டாது என்பது, மீண்டும் தெளிவாக உரைக்கப்பட்டு உள்ளது. ஆகவே, நாம் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருக்க முடியாது; காத்திருக்கக் கூடாது.
செய்ய வேண்டிய செயலைச் செய்ய வேண்டிய சமயத்தில், விரும்பியோ, விரும்பாமலோ, நம்மை நாமே செய்யுமாறு வற்புறுத்தும் சக்தியே கல்வியாகும். ஆனாலும், அறிவார்ந்த சமூகம் என்றும், கல்வி கற்ற சமூகம் என்றும் தங்களுக்குள் பெருமையாகக் பிதற்றிக் கொள்ளும் தமிழர்கள், தங்கள் சுதந்திர வாழ்வு நோக்கிய, முக்கிய ஆவணப்படுத்தலில் ஆர்வம் இன்றி, கடந்த 10ஆண்டுகள் இருந்து விட்டார்கள்; இனியும் காலம் தாமதிக்க முடியாது.
இக்கணக்கெடுப்பு, விவரம் சேகரித்தல் நிகழ்ச்சித் திட்டம், குறுகிய காலத்தில் செய்து முடிக்கும் காரியம் அல்ல. 2015ஆம் ஆண்டளவில் இந்தக் காரியங்களைத் ஆரம்பித்திருந்தால், இப்போது செய்து முடித்திருக்கலாம்.
அடுத்த ஐனாதிபதித் தேர்தலை, விரைவில் நாடு சந்திக்கவுள்ளது. இந்நிலையில் ஆட்சிமாற்றங்கள் ஏற்பட்டால், இவ்வேலைத் திட்டங்களுக்கும் ஆபத்துகளோ அச்சுறுத்தல்களோ ஏற்படலாம். ஆனாலும், தமிழ் மக்கள் சோர்ந்து போக முடியாது.
‘நன்றாகத் தொடங்கப் பெற்ற காரியம், பாதி முடிந்ததற்குச் சமம்’ என்பது நமது முதுமொழி. சற்றுக் காலம்கடந்து தொடங்கப் பெற்றாலும், இதைச் செய்து முடிப்போம் என்ற மனோதைரியத்துடனும் வரக்கூடிய சவால்களைச் சந்திக்கக் கூடிய வகையிலும் பிள்ளையார் சுழி போடுவோம்.
இந்த ஆவணப்படுத்தல் வேலைத்திட்டத்தை, தமிழ் மக்களால் நிர்வகிக்கப்படுகின்ற வடக்கு, கிழக்கின் அனைத்துப் பிரதேச சபைகளும் விரைவாக ஆரம்பிக்க வேண்டும். எப்போது, தகவல்கள் திரட்டி முடிக்கப் போகின்றோம் என்ற காலக்கெடு தெளிவாக இருக்க வேண்டும்.
இதன் பொருட்டுத் தயாரிக்கப்படுகின்ற விண்ணப்பப்படிவத்தின் விவரங்கள், வடக்கு, கிழக்கு முழுதும் ஒத்த தன்மை உள்ளவையாக, ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். படிவங்கள், மூன்று மொழிகளிலும் இடம்பெற வேண்டும். பாமர மக்களுக்கும் இலகுவாகப் புரியக் கூடிய வகையில் தயாரிக்கப்பட வேண்டும்.
இவற்றைத் தயார்படுத்தும் பணியில், துறைசார்ந்த நிபுனர்கள் பங்களிப்பும் முக்கியமானது. தேவை ஏற்படும் பட்சத்தில், சர்வதேச புலமையாளர்களின் அறிவு, அனுபவம் உள்வாங்கப்பட வேண்டும். இது தொடர்பில், கடந்த காலங்களில் வெளிநாடுகளில் எவ்வகையான உபாயங்கள் கைக்கொள்ளப்பட்டுள்ளன என்பது கண்டறியப்பட வேண்டும்.
இந்த வேலைத்திட்டத்தில், அரசியல் கட்சிகளின் சிறுபிள்ளைத்தனங்கள், செல்வாக்குகள் ஓரங்கட்டப்பட வேண்டும். மொத்தத்தில், இதுவொரு தூய பணியாக, சுதந்திரத்துக்கான அறப்பணியாகச் செயற்படுத்தப்பட வேண்டும்.
திரட்டப்படவுள்ள விவரங்கள் உண்மையாவை; ஆதாரபூர்வமானவை. அவற்றை பொய் என்றோ, இட்டுக்கட்டியவை என்றோ எவரும் புறக்கணித்துவிட முடியாது. ஆகவே, அவை உண்மையை பட்டவர்த்தனமாக உலகுக்குக் சொல்லும்; உலகம் நிச்சயம் கண் விழிக்கும்.
ஆகவே, இவை எதிர்காலத்தில் தமிழர்களின் நீண்டகால பிரச்சினைக்கான தீர்வுக்கு வலுச் சேர்க்கும். அநியாயமாகக் கொல்லப்பட்ட தமிழர்களின் உயிர்கள், தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வைப் பெற வழி வகுக்க வைக்கப்படவேண்டும். ஏனெனில் விதி ஒரு கதவை மூடினால், நம்பிக்கை பல்லாயிரம் கதவுகளைத் திறக்கும்; திறந்துள்ளது.