21 வயதாகும் செரேனோவை நான் சந்திக்கும் போது வன்முறை நிறைந்த லா டோலோரிட்டா என்ற சேரியில் வசித்துவந்தார். அவருடைய பெண் குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டால் கடந்த மே மாதம் வாடிக்கொண்டிருந்தபோது, மருத்துவ உதவியை நாடி அவர் தவித்துக்கொண்டிருந்தார். ஆனால், படுக்கைகளோ மருத்துவர்களோ மற்ற விஷயங்களோ இல்லை என்று காரணம் காட்டி, மூன்று மருத்துவமனைகள் அந்தக் குழந்தைக்குக் கைவிரித்துவிட்டன.
ஒரு அவசரச்சிகிச்சை அறையில் அந்த எட்டு மாதப் பெண் குழந்தையைப் பார்க்க ஒரு ஆள் கிடைத்தது, செரேனோ ஒரு வெள்ளைத் தாளைக் கொண்டுவர வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில். ஏனெனில், மருத்துவ சிகிச்சை தகவல்களைப் பதிவுசெய்துகொள்ள அந்த மருத்துவமனையில் காகிதங்கள் இல்லை. அந்த மருத்துவமனை டெய்ஷாவை வீட்டுக்கு அனுப்பியது. அதே இரவில் டைஷா தன் வீட்டில் உயிரிழந்தாள்.
பொருளாதாரத் தடைகள் காரணமா?
“அவள் சில்லிட்டுப்போயிருந்தாள். மூச்சுவிடவும் முடியவில்லை. நானோ ஓலமிட்டு அழுதேன்” என்று செரேனோ சொல்லும்போதே அவரின் கன்னங்களில் கண்ணீர் தாரைதாரையாய் வழிந்தது. உதவிமனப்பான்மையுள்ள பக்கத்து வீட்டுக்காரர் அவசரச்சிகிச்சை எண்ணை அழைக்க, அதற்கான ஆட்கள் வருவதற்கு 11 மணி நேரம் ஆகிவிட்டிருந்தது. அவர்கள் வந்து டைஷாவின் பிணத்தை எடுத்துச்சென்றார்கள்.
அமெரிக்கர்களுக்கான சங்கடமான கேள்வி ஒன்று: வெனிசுலாவின் அரசுக்கு முட்டுக்கட்டை போடுவதற்காக நாம் விதித்த பொருளாதாரத் தடைகள், டைஷா போன்ற குழந்தைகளின் மரணத்துக்குக் காரணமாகின்றனவா? வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் மூர்க்கமான அரசாங்கம்தான் இந்தத் துயரங்களுக் கெல்லாம் பிரதான காரணம்.
அவர் நினைத்திருந்தால், குழந்தைகளின் உயிரைக் காப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். இந்நிலை யில், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவும், தற்போதைய அதிபர் ட்ரம்ப்பும் விதித்த பொருளாதாரத் தடைகள் வெனிசுலாவின் சீரழிவுக்கும் சராசரி வெனிசுலா மக்களின் துயரத்துக்கும் மேலும் காரணமாகின்றன.
“வெனிசுலாவின் பொருளாதாரமானது கொந்தளித் துக்கொண்டிருக்கும் கடலில் மிதக்க முடியாமல் போராடிக்கொண்டிருக்கும் குடிகாரனைப் போல் இருந்தது. மிதவை ஒன்று கிடைத்தால் தப்பித்துவிடலாம் என்று வேண்டிக்கொண்டிந்தான் அந்தக் குடிகாரன்.
ட்ரம்ப்பின் நிர்வாகமோ மிதவைக்குப் பதில் பெரும் சுத்தியலைத் தூக்கியெறிந்தது. சுத்தியல் என்பது உதவியே அல்ல. அது அந்தக் குடிகாரனை மேலும் வேகமாக மூழ்கடிக்கும். ஆனால், அந்தக் குடிகாரன் ஏன் மூழ்கிக்கொண்டிருக்கிறான் என்ற விவாதத்தின் மையக் காரணமாக சுத்தியலை நீங்கள் சுட்டிக்காட்ட முடியாது” என்கிறார் வெனிசுலா பத்திரிகையாளரான ஃப்ரான்ஸிஸ்கோ டோரோ.
வெனிசுலா தற்போது சிதைவை நோக்கியும் பெருந்திரள் பட்டினியை நோக்கியும் நழுவிக் கொண்டிருக்கிறது. உள்நாட்டில் ஆயுதம் தாங்கிய பல்வேறு குழுக்களின் கட்டுப்பாட்டுக்குள் நாடு துண்டுதுண்டாகிக்கொண்டிருக்கிறது. மலேரியா, டிப்தீரியா, அம்மை போன்ற நோய்கள் பரவிக்கொண்டிருக்கின்றன. குழந்தைகளின் இறப்பு
2008-ல் நிகழ்ந்ததைவிட இரு மடங்காகிக்கொண்டிருக்கிறது.
இதற்கெல்லாம் மதுரோவின் எதிர்வினை மனசாட்சியற்றதாக இருக்கிறது. ராணுவ அதிகாரிகளை விலை கொடுத்து வாங்குகிறார். மருந்துகளை வாங்குவதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்தியிருக்கலாம். வெளிநாட்டு உதவிகளையும் ஏற்றுக்கொள்ள மதுரோ மறுக்கிறார். முக்கியமான சர்வதேச மனிதநேய அமைப்புகளையும் வெனிசுலாவுக்குள் நுழையவிடாமல் தடுக்கிறார்.
ஆட்சி மாற்றமே தீர்வு
புதிய அரசாங்கம் அமைவதே வெனிசுலாவின் மக்களுக்கு சிறப்பான விஷயமாக இருக்கும். ஆனால், மதுரோவைப் பதவியிலிருந்து விலக வைப்பதில் பொருளாதாரத் தடைகள் தோல்வியுற்றுவிட்டன. மாறாக, இந்தத் தடைகள் ஏற்கெனவே பலவீனமாக இருக்கும் வெனிசுலா மக்களின் துயரத்தை அதிகரித்துவிட்டிருக்கின்றன.
வெனிசுலாவின் தலைநகரும், நாட்டிலேயே ஓரளவு பரவாயில்லை என்று சொல்லத்தகுந்த இடமுமான காரகாஸிலேயே மக்கள் படும் துயரமானது சொல்லில் அடங்காது. 21 வயதான எல்ஸிஸ் ஸில்கதோவுக்கு இரண்டு குழந்தைகள்.
கடந்த மாதம் அந்த இருவரும் கிட்டத்தட்ட மரணத்தைத் தொட்டு மீண்டிருக்கின்றனர். அலாஸ்கா என்ற அவருடைய 5 வயதுக் குழந்தையின் எடை வெறும் 11 கிலோதான். அந்தக் குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் ஹெய்க்கோ என்ற மூன்று வயதுக் குழந்தை கடுமையான தொற்றாலும் நீடித்த 104 டிகிரி காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டிருந்தன.
படுக்கைகள் இல்லை என்ற காரணத்தைச் சொல்லி ஸில்கதோவும் அவரது குழந்தைகளும் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்படவேயில்லை. பொது மருத்துவமனைகளில் நுழைய முற்பட்டபோது நானும் அனுமதிக்கப்படவில்லை. அந்த மருத்துவமனைகள் எல்லாம் ஆயுதம் ஏந்திய குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்தன.
பத்திரிகையாளர்களின் புலனாய்வை அவர்கள் விரும்பவில்லை. பத்திரிகையாளர்கள் மருத்துவமனைகளுக்குள் செல்வதை அதிகார மட்டம் ஏன் விரும்பவில்லை என்பது எனக்குப் புரிகிறது: அருவருப்பான அவசரச்சிகிச்சை அறைகளையும் அங்கே மின்சாரம் இல்லை என்பதையும் அங்கே தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும் என்பதையும் ஸில்கதோ என்னிடம் விவரித்திருந்தார்.
ஒருவழியாக அலாஸ்காவும் ஹெய்க்கோவும் பிழைத்துக்கொண்டார்கள். என்றாலும், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அலாஸ்கா இறந்துவிடக்கூடும் என்று ஸில்கதோ இன்னும் அஞ்சுகிறார். சேரிகளில் உள்ளவர்களில் பலரும் தாங்கள் ஆரம்பத்தில் ஹ்யூகோ சாவேஸை ஆதரித்தோம் என்றார்கள். அவர்தான் இந்த ஆட்சியை நிறுவியது. அந்த மக்கள் அனைவரும் தற்போது மதுரோவுக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருக்கிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் ஹ்வான் குவைதோவைச் சந்தித்தேன். மதுரோவின் அரசைக் கவிழ்ப்பதற்கான குவைதோவின் முயற்சி தோற்றுவிட்டிருந்த நிலை. எனினும், அந்த அரசை வெனிசுலா மக்கள் ஒரு கட்டத்தில் தூக்கியெறிவார்கள் என்று குவைதோ நம்பிக்கை தெரிவித்தார். அவரிடம் சற்று அழுத்திக் கேட்டபோது, தற்போது ஏற்பட்டுள்ள மனித அவலத்தைப் பொருளாதாரத் தடைகள் மேலும் மோசமாக்கக் கூடும் என்ற சாத்தியத்தை ஒப்புக்கொண்டார்.
“வெனிசுலாவுக்கும் சரி… உலகத்துக்கும் சரி இது ஒரு பெரிய பிரச்சினை” என்றார். எனினும், மதுரோவை அகற்றுவதற்கு உதவும் என்ற வகையில் பொருளாதாரத் தடைகளை அவர் ஆதரிக்கிறார். “அழுத்தம் கொடுப்பதற்கான எல்லா சாதனங்களையும் நாம் பயன்படுத்தியாக வேண்டும்” என்றார் குவைதோ.
மதுரோவின் பாராமுகம் வேதனைக்குரியது
அது உண்மையாக இருக்கலாம். ஆனால், நான் சந்தித்த சேரிவாசிகளிடமே என் மனது திரும்பத் திரும்பச் செல்கிறது. எனது வழிகாட்டியின் அறிவுரைப்படி என்னுடைய கைக்கடிகாரத்தையும் எனது திருமணச் சங்கிலியையும் அகற்றிக்கொண்டேன், அவை வழிப்பறிக்குள்ளாக வாய்ப்பிருக்கிறது என்ற அச்சத்தால்.
பிறகு, உண்மையிலேயே பசியோடு இருக்கும் ஒரு குடும்பம் என்னை நம்ப முடியாத, உடைந்த படிக்கட்டின் வழியே பழுதான, கூட்டம் மிகுந்த ஒரு அடுக்ககத்துக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த ஒருவர் என்னை மதிப்புக்குரிய விருந்தினராக மதித்து எனக்கு பானமும் உருளைக்கிழங்கு வறுவலும் வாங்க ஓடினார். எனக்கு ரொம்பவும் கஷ்டமாக இருந்தது – அவர்களின் அன்பு என்னை அடிபணிய வைத்தது.
இவர்கள் போன்ற மக்கள் மதுரோவின் பாராமுகத்தால் ஏற்கெனவே பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இன்னும் என்னென்ன அழிவுகள் காத்திருக்கின்றனவோ. ஆகவே, வெனிசுலா மக்களின் துயரத்தை அதிகப்படுத்தாமல் இந்த ஆட்சியை அசைந்துகொடுக்கச் செய்யும் புது வழிகளை நாம் நாடுவோமாக. ஒருவேளை, ‘உணவு கொடுத்தால் எண்ணெய் கொடுப்போம்’ என்பது போன்ற திட்டங்கள் உதவலாம்.
கூடவே, மனிதநேய உதவிகளை அனுமதிக்கும் வகையில் மதுரோவுக்கு அழுத்தம் கொடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். புவியின் இந்த நிலப்பரப்பானது மனிதப் பேரவலத்தை நோக்கி வெகு வேகமாக நகர்ந்துகொண்டிருக்கும் வேளையில், அமெரிக்கா தனது உத்தியை மறுபரிசீலிக்க வேண்டும்.
தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: ஆசை