ஏனெனில் அவர்களது பிரச்சினை நேரடியாக வெறும் இடப்பெயர்வு அல்லது புகலிட கோரிக்கை எனும் அளவில் நின்றிடாமல், இலங்கை இந்திய அரசியலுறவு, பூகோள அரசியல், தனிநாடு கோரிக்கை , விடுதலை அமைப்பு மற்றும் அதன் அதன் தலைமைகள் , இந்திய பிரதமர், தமிழ் தேசியம் என ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த பல்வேறு கூறுகளை உள்ளடக்கியது.
ஆதலால் அவர்களின்பால் அக்கறையுடன் அல்லது பொதுச்சமூகத்தின் குரலாக நின்று பேசுகிறோம் என்பவர்கள், அவர்களது பிரச்சினைய வெறும் உணர்ச்சி அடிப்படையில் பச்சாதாபம் தேடுவதாகவோ, கழிவிறக்கம் கோரும் வகையிலானதாகவோ இருப்பதும், அல்லது ஒரு நிகழ்வை, ஒரு இக்கட்டை வைத்து மட்டுமே அரசுகளை அதிகாரிகளை துறையை கேள்வி கேட்டு, ஏளனப்படுத்தி அவமதிப்பு செய்வதாலேயே அவர்களது பிரச்சனைக்கு தீர்வை எட்டிவிடலாம் என்பது சரியான அனுகுமுறை ஆகாது.
மாறாக அவர்களது பிரச்சினையின் தன்மை,அவர்களது நிலைப்பாடு, அவர்களுக்கானவர்களாக இருப்பவர்களின் சூழல் ஆகியவற்றையும் உள்ளடக்கி தார்மீகத்தின் பொருட்டு சட்டத்தினடிப்படையில் அரசியல் தீர்வுகளை முனைவைக்கும்போதுதான் அவர்களது பிரச்சினைக்கு தீர்வுகளை எட்ட முடியும்.
அதாவது, அவர்களைப்பொருத்தவரை தாங்கள் அகதிகள் என அவர்களே உணரும் நிலை இருந்தாலும், இந்திய தேசத்தின் வெளிநாட்டவர் சட்டம், பாஸ்போர்ட் சட்டம், மற்றும் குடியுரிமை சட்டத்தின்படி அவர்கள் சட்ட விரோத குடியேறிகள் என்பதையே மத்திய அரசு அகதிகள் தொடர்பான வழக்குகளில் முன்வைக்கிறது.
ஆக, சட்ட விரோத குடியேறிகளுக்கு என்ன நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டுமோ அதைத்தான் மத்திய மாநில அரசுகள் கடைப்பிடிக்கும்.
ஆனாலும் இலங்கை அகதிகளைப்பொருத்தவரை அப்படி முழுமையாக சட்ட விரோத குடியேறிகளாக கையாளப்படுவதில்லை. அவர்களுக்கென்று சில பிரத்தியேக நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறது. அதே சமயம் குடியுரிமை கோரிக்கை எனும் இடத்தில் மட்டும் உறுதியாக சட்ட விரோத குடியேறிகள் எனும் நிலைப்பாட்டை மத்திய அரசு அழுத்தமாக பதிவு செய்கிறது.
2003 – ஆம் ஆண்டு தான் இந்திய நாடாளுமன்றத்தில் சட்ட விரோத குடியேறிகள் என்பதற்கான வரையறை உறுதிச்செய்யப்படுகிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து கடவுச்சீட்டு மற்றும் விசா இல்லாமல் இந்தியாவிற்கு வருவதும், அப்படியே உரிய கடவுச்சூட்டுடன் வந்தாலும் விசா காலாவதியான பின்பும் அதனை புதுப்பிப்பு செய்யாமல் அரசிற்கும் தகவல் தெரிவிக்காமல் தலைமறைவாகவும் இரகசியமாகவும் இருப்பவர்களே சட்ட விரோத குடியேறிகள் என்று உறுதிச்செய்யப்பட்டது.
இலங்கை அகதிகள் படகு மூலம் வந்தவர்கள் கடவுச்சீட்டும் விசா வும் இல்லாதவர்கள், இவர்கள் பெரும்பாலும் முகாமிலிருப்பவர்கள், அடுத்து, கடவுச்சீட்டுடன் வந்து விசா காலாவதியானப்பின்பும் காவல் நிலையத்தின் விபரங்களை சமர்பித்து தங்கியிருப்பவர்கள், இவர்கள் பெரும்பாலும் முகாமிற்கு வெளியே இருப்பவர்கள். இவர்களையே நாம் அகதிகள் எனும் வரையறைக்குள் கொண்டு வருகிறோம். அரசும் இவர்களைத்தான் சட்ட விரோத குடியேறிகள் என்று வகைப்படுத்துகிறது.
இன்னும் சிலர் கடவுச்சீட்டுடன் வந்து, விசாவையும் புதுப்பித்துக்கொண்டு தங்கியிருக்கிறார்கள், இந்த வகையில் வருபவர்கள் நீண்ட காலம் தங்கியிருந்ததின் அடைப்படையில் இந்திய குடியுரிமை பெற்று சென்னை திருச்சி போன்ற இடங்களில் பெரும் சொத்துக்களை வாங்கி வசதி வாய்ப்புகளுடன் வாழ்பவர்களும் உண்டு, இன்னும் சிலர் எப்படியான வழிமுறையில் வந்திருந்தாலும் அரசியல் காரணங்களுக்காக இரண்டு நாட்டு அனுசரணையுடன் தனிச்சலுகை பெற்று ஏகபோகமாக இருக்கிறார்கள். இவர்கள் இந்த சட்ட விரோத குடியேறிகள் எனும் வறையறைக்குள் வர மாட்டார்கள்.
சட்ட விரோதிகள் என்பதற்கான வரையறை 2003 ஆண்டு தான் கொண்டுவரப்படுகிறது. ஆனால் 1983 ஆம் ஆண்டு தொடக்கம் 2003 க்கு முன்னரே வந்தவர்களையும் இந்த வறையறைக்குள் பொருத்துவது எப்படி சரி எனும் வாதம் அவர்களுக்கான தீர்வை வழங்கும் இடத்திலுள்ள யார் காதிற்கும் எட்டாதவாறு அப்படியே இருக்கிறது.
இலங்கையிலிருந்து ஆபத்தான கடல் பயணத்தை தொடங்கியவர்கள் பல்வேறு இன்னல்களைச்சந்தித்து உயிருடன் மண்டபம் வந்திறங்கிய நாள் முதல், அல்லது கடவுச்சீட்டில் விசாவுடன் வந்தடைந்து காவல்துறையில் பதிவு செய்த கணத்தில் இருந்து தற்போதுவரைக்குமான அனைத்து ஆவனங்களும் அரசால் பராமரிப்புக்கப்படுகிறது.
அவர்களது ஒவ்வொரு அசைவுகளும் தனி வட்டாட்சியர், வருவாய் அதிகாரி, கிராம நிர்வாக அலுவலர், உளவுத்துறை ஆகிய அனைவராலும் கண்காணிக்கப்படுகிறது.
சில நேரங்களில் அவர்களது சமூக வலைத்தள செயல்பாடுகள் வரை அறிக்கைகளாக துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் அவர்களது ஆவனங்களின் அடிப்படையில் தமிழக அரசின் அனைத்து சமூக நலத்திட்டங்களும் இலங்கை அகதிகளுக்கும் வழங்கப்படுகிறது.
எனவே இவர்கள் தலைமறைவாகவும் இல்லை இரகசியமாகவும் இல்லை. எனவே இந்த வகையிலும் இவர்கள் சட்ட விரோத குடியேறிகள் எனும் வறையறைக்குள் வரமாட்டார்கள். ஆக இந்த கேள்ளிவியும் அப்படியே இருக்கிறது.
இதைத்தவிர இலங்கை இந்தியா ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் நடைப்பெற்ற ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்ட வகையில் 1,40,000 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. (இதுப்பற்றி முந்தைய பதிவுகளில் விபரமாக இருக்கிறது)
இதுதான் இலங்கை அகதிகளைப்பற்றிய தற்போதைய நிலை, இதனடிப்படையில் தங்களது ஆதரவு எதிர்நிலைகளில் இருந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்யலாம்.
ஆனால், சிலர் அகதிகளுக்காக குரல் கொடுக்கிறோம் எனும் பெயரில், சீக்கியர்கள் இந்திய பிரதமரை கொன்றார்கள் அவர்களை இந்தியா எதிரியாக பார்க்கவில்லை, ஆனால் தமிழர்களை எதிரியாக பார்க்கிறார்கள், தமிழகத்தில் அகதிகளால் மருத்துவம் படிக்க முடியவில்லை, சீனா படிக்க அனுமதிக்கிறது. என்பது போன்ற ஒருவிதமான எதிர் மனநிலை கருத்துக்களை பதிவிடும்போது ஓரளவிற்கு அகதிகளின் பிரச்சினைகளுக்கு செவிமடுத்து அவர்களது கோரிக்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பவர்களையும், இந்தியர் எனும் கண்ணோட்டத்தில் இருப்பவர்களையும் கனிவான பார்வையிலிருந்து விலக்கி எதிர் தரப்பிலிருப்பவர்களாக அனுமானித்து செயல்பட தூண்டுகிறது.இம்மாதிரியான செயல்பாடுகள் அகதிகளுக்கு நன்மை பயக்காது.
இதுப்போன்ற செயல்களை செய்பவர்கள், அல்லது அதனை பகிர்ந்து தாங்களும் அதில் உடன்படுகிறோம் என்பதை வெளிப்படுத்தும் நபர்கள் பெரும்பாலும் அவர்களுடைய அரசியல் நிலைப்பாட்டுடன் சேர்த்து அகதிகள் பிரச்சனையை அனுகும் புலம்பெயர் தமிழர்களாகவும், அகதிகளின் பிரச்சினைப்பற்றிய அடிப்படை சட்ட வரையறைகளை அறியாத அகதிகளில் சிலருமாக இருக்கிறார்கள்.
இதுபோன்ற பதிவுகள் மூலம் தங்களது ஆற்றாமையை பதிவு செய்வதாக நினைத்து அவர்கள் கடந்துவிடுகிறார்கள், ஆனால் இது என்ன மாதிரியாக பொது புத்தியில் பதியும் என்றோ அகதிகளுடைய பிரச்சினையில் ஏற்படுத்தும் தாக்கங்கள் பற்றியோ அவர்கள் சிந்திப்பதில்லையோ என்றே தோன்றுகிறது.
இதுப்போன்ற செயல்பாடுகளிலிருந்து அவர்கள் தங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டியதும், அதனை சுட்டிக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் இருக்கிறார்கள் என்பதுமே எதார்த்தமாக இருக்கிறது.