அரசசேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக திருமணப்பதிவு செய்யவேண்டிய கட்டாயத்தில் பலர் திருமணப் பதிவினை மேற்கொள்கின்றனர்.இன்றைய காலகட்டத்தில் ‘சேர்ந்து வாழ்தல்’ (living together) என்பது கலாசார சீர்கேடாகவும், மேற்கத்தைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நடைமுறையாகவும் கருதப்படுகிறது.
ஆனால், ‘பதிவுசெய்தல்’ என்பது காலனித்துவத்தின் விளைவாக உருவானது என்பதும், அதுவே மேற்கத்தைய நடைமுறை என்பதும் நாம் அறிந்துகொள்ளத் தவறிய உண்மையாக இருக்கின்றது.ஆளுகைசார் தேவைகளுக்காகவும், அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும், பிள்ளைகளைப் பராமரித்தல் மற்றும் அவர்களுக்கான உரித்து, சொத்துரிமை போன்ற பலவற்றிற்கு திருமணப்பதிவு, பிறப்புச் சான்றிதழ், மரண அத்தாட்சிப் பத்திரம் போன்றவை தேவையாக இருக்கின்றன.
ஒரு காலத்தில் இவை எமது பண்பாடு, பழக்கவழக்கம், மற்றும் நடைமுறைகளில் இருந்திருக்கவில்லை என்பதை நாம் அறிந்திருக்கின்றோமா?குறிப்பாக, காலனிய ஆதிக்கத்தின்கீழ் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு முக்கியமான அம்சமாக திருமணம் இருந்திருக்கின்றது. ஆங்கிலேயர் காலத்தில் திருமணச் சட்டங்கள் உருவாக்கப்பட்டபோது, கண்டியிலுள்ள சில மக்கள் மத்தியில் பெண்கள் (தனது கணவனின்) சகோதரர்கள் பலரை பலதார மணம் செய்யும் முறை இருந்தது.
திருமணப் பதிவுமுறை அறிமுகப்படுத்தப்பட்டபோது, கண்டி மக்கள் திருமணப் பதிவினை பெரும்பாலும் கவனத்திற்கொள்ளவில்லை. இதன்காரணமாக, ஆங்கிலேயரின் இறுக்கமான திருமணச் சட்டத்தினை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டு நெகிழ்ச்சித்தன்மையுடன் கூடியதாக அது மாற்றப்பட்டதாக இலங்கையின் பிரபலமான பெண்ணிலைவாதி குமாரி ஜயவர்தன, ‘மூன்றாம் உலக நாடுகளில் பெண்ணியமும் தேசியவாதமும்’ எனும் தனது புத்தகத்தில் குறிப்பிடுகின்றார்.
மேலும் அவர், இவற்றின்காரணமாக திருமணமுறிவு விடயத்தில் இருவரது சம்மதத்துடனும் விசாரணையின் மூலம் திருமணத்தினை முடிவிற்குக் கொண்டுவரக்கூடிய நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டதாகவும், அதனால் கண்டியில் வாழ்வோர் இலங்கையின் ஏனைய பகுதிகளைவிடவும் மேம்பட்ட திருமணச் சட்ட நடைமுறைகளை அனுபவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காலனித்துவத்தின் விளைவுகள் வெறுமனே பெளதீகரீதியானவை மட்டுமல்ல, எமது அறிவிலும், சிந்திக்கும் முறையிலும், பண்பாட்டிலும் பாரிய மாற்றங்களை அது ஏற்படுத்தியதுடன், காலனித்துவ நடைமுறைகளையும், மேற்கத்தைய அறிவையும் உயர்வாகக் கொண்டாடும் மனநிலை மாற்றத்தையும் ஏற்படுத்தியது.
உதாரணமாக, இலங்கையில் இன்றிருக்கக்கூடிய நீதிமன்ற நடைமுறையைக் கருத்தில் கொள்வோமானால், அது காலனித்துவத்தின் விளைவாக இங்கு ஏற்படுத்தப்பட்ட நடைமுறையாகவும், காலனித்துவத்தின்போது நிலவிய அதிகார ஏற்றத்தாழ்வினை எடுத்துக்காட்டும் ஓர் முறைமையாகவும் இருக்கின்றது.
நீதிமன்றச் செயன்முறையின்போது எதிர்பார்க்கப்படும் அபரிமிதமான கீழ்ப்படிவும், அமைதியும் காலனித்துவத்தின் எச்சங்களாக எம்முன் இருப்பவை.கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை, குறிப்பாக மட்டக்களப்பு பகுதிகளில் கலத்தில் போடுதல் எனும் சடங்கு மணமக்களை திருமண உறவில் இணைக்கப் போதுமானதாக இருந்தது.
காலப்போக்கில் திருமணப்பதிவு முக்கியமானதொரு அம்சமாகக் கருதப்படும் போக்கு உருவானது. தற்காலத்தில் விவாகரத்துசார்ந்த வழக்குகள் அதிகரித்திருக்கின்ற அதேவேளை இருவரும் முன்வந்து பிரிவதற்கான சட்டக் கொடுப்பனவுகளும் இல்லாத நிலையில் சோரம்போதல்(Adultery), பிள்ளைப் பேறற்ற நிலை(Impotency), வன்ம உறவறுப்பு (Malicious Desertion) ஆகிய காரணங்களை அடிப்படையாகக்கொண்டு மட்டுமே விவாகரத்தினைப் பெறும்நிலை காணப்படுகின்றது.
வீட்டு வன்முறை மற்றும் திருமண உறவிற்குள் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்கொடுமை (Marital rape) போன்றவைகூட விவாகரத்திற்கான காரணங்களாக சட்டரீதியாக அங்கீகரிக்கப்படாத நிலையில், பெண்கள் வன்முறையான திருமண உறவுகளில் சிக்குண்டிருக்கும் நிலையையும் காணக்கூடியதாக உள்ளது.சட்டச் செயன்முறைகளின் குறைபாடுகளின் காரணமாக திருமண உறவுகளில் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் திருமண உறவினை முறித்துக்கொள்ள விரும்பும் பெண்கள் போன்றோர் எந்தச் சட்டப் பாதுகாப்பிற்காக பதிவுத் திருமணம் செய்துகொண்டார்களோ, அந்தப் பதிவின் காரணமாகவே அத்தகைய உறவுகளில் இருந்து விடுபடுவதில் பாரிய சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
அன்பு, காதல், பரஸ்பர மரியாதை போன்றவற்றிற்கும் மேலாக நம்பிக்கையும், சமூக அங்கீகாரமும் திருமணத்தின் அடிக்கற்களாக இருந்தநிலைமாறி, ஒருவரையொருவர் உறவில் வலிந்து தொடரச் செய்வதற்கு திருமணப்பதிவு பயன்படுத்தப்படும் நிலையே இன்று ஏற்பட்டுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் சேர்ந்து வாழ்தல் என்பது எம்மத்தியில் இழிவாகக் கருதப்படும் நிலையே உள்ளது. காலனித்துவம் வெறுமனே திருமணத்தினை சட்டபூர்வமானதாக்கும் சட்டங்களை மட்டுமே அறிமுகப்படுத்தவில்லை. திருமணம் சார்ந்த எமது பாரம்பரிய சடங்குகளையும், திருமணத்திற்கான முக்கியத்துவத்தினையும், திருமணம்சார்ந்த எமது பார்வையையுமே மாற்றியமைத்துள்ளது.
இன்றைய அரசியற், பொருளாதார, சமூகச் சூழலில் எது சரியானது என்பதை வரையறுப்பது கட்டுரையாளரின் நோக்கமல்ல, மாறாக ஒவ்வொருவரும் தமது நெருங்கிய துணையுடனான உறவினை எத்தகையதாக வடிவமைத்துக் கொள்கின்றார்கள் என்பதை அவற்றின் நன்மை, தீமை அறிந்து அவர்களே தீர்மானிப்பதற்கான சமூகச் சூழல் அமைய வேண்டும் என்பதையே நோக்காகக் கொண்டதாகும்