வானத்தில் தொடர்ச்சியாக வேடிக்கை காட்டிய மின்னல் கீற்றுகளும், காதைப்பிளக்கும் வகையில் முழங்கிய இடிச் சத்தமும் நகரவாசிகளை பீதியில் ஆழ்த்தின. , மரங்களில் அமைதியாக அமர்ந்திருந்த காகங்கள் பயங்கர இடிச் சத்தத்தின் அதிர்வால்
அபாயக் குரல் எழுப்பியவாறு அங்கும் இங்குமாகப் பறந்து திரிந்தமை நகரின் பீதி சூழலை மேலும் அதிகரித்தது. மின்னல்கள் வெட்டாத தருணங்களிலும், வானம் இடைவிடாது உருமிக்கொண்டே இருந்தது.
இந்த திடீர் கனமழையின் காரணமாகக் கொழும்பு நகரின் பல தாழ்நிலப் பகுதிகள் குறுகிய நேரத்திற்குள் வெள்ளக்காடாக மாறின. வீதிகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீரால், வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுப் பெருமளவிலான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பிரதான வீதிகளில் வாகனங்கள் மிக மெதுவாகவே நகர முடிந்ததால், நீண்ட நேரப் போக்குவரத்துத் தடை நிலவியது.
எனினும், இத்தகைய மோசமான வானிலையிலும், கொழும்புப் போக்குவரத்துப் பொலிஸார் கொட்டும் மழையில் நனைந்தவாறே வீதிகளில் நின்று போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்களின் இந்த அர்ப்பணிப்புமிக்க சேவை பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
மறுபுறம், மழையின் காரணமாகப் பேருந்து சேவைகள் தடைப்பட்டதால், பெரும்பாலான பேருந்து தரிப்பிடங்களில் பயணிகள் நீண்ட நேரமாகக் காத்துக் கிடந்தனர். வேலை முடிந்து வீடுகளுக்குத் திரும்ப வேண்டிய ஆயிரக்கணக்கான அலுவலகப் பணியாளர்களும், பொதுமக்களும் உரிய நேரத்தில் போக்குவரத்து வசதிகள் கிடைக்காமல் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
வானிலை அபாயம் இன்னும் நீடிப்பதால், தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் வீதிப் பாதுகாப்பு அதிகாரிகளும் வானிலை அவதானிப்பு மையமும் கேட்டுக்கொண்டுள்ளன.