ஜூன் 13ஆம் திகதி அன்று நடைபெற்ற பிரேசிலுக்கெதிரான போட்டியில், மொராக்கோ சார்பில் மைதானத்தில் விளையாடிய 11 வீரர்களில் ஒருவர் கூட மொராக்கோவில் பிறந்தவர் அல்லர் என்ற அசாத்தியமான வரலாற்று நிகழ்வும் அரங்கேறியுள்ளது.
விதிகளின் மாற்றமும் உலகக் கிண்ண வரலாறும்:
1904 இல் சர்வதேச கால்பந்தாட்டச் சம்மேளனம் தொடங்கப்பட்டபோது இதற்கான கடுமையான விதிகள் இருக்கவில்லை. ஆர்ஜென்டினாவுக்காக லூயிஸ் மொன்டி 1930 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாடிவிட்டு, 1934 உலகக் கிண்ணத்தில் இத்தாலி அணிக்காக விளையாடி கிண்ணத்தை வென்றார். உலகக் கிண்ண வரலாற்றில் இரு வேறு நாடுகளுக்காக இறுதிப் போட்டியில் விளையாடிய ஒரே வீரர் இவரே ஆவார்.
இதனைத் தொடர்ந்து 1962-இல் கால்பந்தாட்டச் சம்மேளனம் குடியுரிமை விதியைக் கொண்டுவந்தது. பின்னர் 2004 மற்றும் அண்மைக்கால விதிமாற்றங்களின்படி:
ஒரு வீரரின் பெற்றோர் அல்லது பாட்டன், பாட்டி ஆகியோர் குறிப்பிட்ட நாட்டில் பிறந்திருந்தால் அந்த நாட்டுக்காக விளையாடலாம்.
21 வயதிற்குட்பட்டவராக இருந்து, சர்வதேச போட்டிகளில் 3 அல்லது அதற்கு குறைவான போட்டிகளில் விளையாடியிருந்தால், அவர்கள் தங்களது இரத்த பந்தம் உள்ள வேறு நாட்டுக்கு மாற கால்பந்தாட்டச் சம்மேளனம் அனுமதி அளிக்கிறது.
அதிகரித்துள்ள வெளிநாட்டுப் பிறப்பு வீரர்கள்:
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொம்பாஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த காலங்களில் 2% முதல் 14% வரை மட்டுமே இருந்த வெளிநாட்டுப் பிறப்பு வீரர்களின் எண்ணிக்கை, 2022 கட்டால் 16.5% ஆக உயர்ந்து, தற்போது 2026-இல் 23% ஐத் தாண்டியுள்ளது. அதாவது நடப்பு உலகக் கிண்ணத்தில் விளையாடும் 1,248 வீரர்களில் 289 பேர் வெளிநாட்டில் பிறந்தவர்களாவர். 48 அணிகளில் 8 அணிகளைத் தவிர மற்ற அனைத்து அணிகளிலும் வெளிநாட்டுப் பிறப்பு வீரர்கள் உள்ளனர்.
முக்கியமான உதாரணம்:
இங்கிலாந்தின் இலண்டனில் பிறந்து வளர்ந்த மைக்கேல் ஒலிசே, தனது தாயாரின் நாடான பிரான்ஸை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
புலம்பெயர் நாடுகளின் எழுச்சி:
புலம்பெயர்ந்த மக்களை அதிகம் கொண்ட மொராக்கோ போன்ற நாடுகள் ஐரோப்பாவில் உள்ள தங்களது திறமையான வீரர்களைக் கண்டறிந்து, 2022 உலகக் கிண்ணத்தில் அரையிறுதி வரை சென்று சாதனை படைத்தன. ஸ்பெய்னுக்கு எதிரான வரலாற்று வெற்றியைத் தேடித்தந்த அஷ்ரப் ஹக்கிமி ஸ்பெய்னில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், பிரேசிலில் பிறந்த டியேகோ கொஸ்டா ஸ்பெய்ன் அணிக்காக விளையாடிய போது 2014 உலகக் கிண்ணத்தில் பிரேசில் ரசிகர்களால் கடுமையாகக் கூச்சலிடப்பட்டார். இது போன்ற தேசிய அடையாளத் தேர்வுகள் கால்பந்து உலகில் இன்றும் விவாதப் பொருளாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.