மது போதைக்கு எதிரான இயக்கத்தின் ஏற்பாட்டில் திரண்ட இப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும், மண்டான் கலைநேசன் சனசமூக நிலையத்திலிருந்து பேரணியாகப் புறப்பட்டுச் சென்று, மண்டானில் அமைந்துள்ள மதுவரித் திணைக்கள அலுவலகத்திற்கு முன்பு ஒன்றுகூடி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
போராட்டத்தின் இறுதியில், நெல்லியடியில் புதிய மதுபானசாலை அமைக்கப்படுவதை வன்மையாகக் கண்டித்து அப்பகுதி பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய மகஜர், மண்டானில் அமைந்துள்ள மதுவரித் திணைக்களத்தின் பொறுப்பு அதிகாரியிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
குறித்த மகஜர் மேலதிக நடவடிக்கைகளுக்காக மதுவரித் திணைக்கள ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
புதிய மதுபானசாலைகளின் தொடர்ச்சியான அதிகரிப்பால் சமூகத்தில் ஏற்படக்கூடிய சீரழிவுகள் மற்றும் குடும்பங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்துக் கவலை வெளியிட்ட போராட்ட ஏற்பாட்டாளர்கள், பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் சமூக நலனையும் கருத்திற்கொண்டு, நெல்லியடியில் மதுபானசாலை அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதியை உடனடியாக மீள்பரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைக் காலமாக புதிதாக நான்கு மதுபானசாலைகளை அமைப்பதற்கு எதிராகப் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.