முழு நாடும் பேரனர்த்தம்

2004 இல் ஆழிப் பேரலை (சுனாமி) பேரழிவை ஏற்படுத்தியது. சுமாராக 30,000 பேர் இறந்தார்கள். ஆனால், அதன்போது கடலை அண்டிய பிரதேசங்களே பாதிப்புக்குள்ளாகின.
இப்போது ஊர், ஆறு, கடல், காடு, கரை, மலை, மடு என்று நாடெங்கும் ஓயாத மழை. கட்டுக்கடங்காத வெள்ளம் கரை புரண்டோடுகிறது.
கிராமப் புறங்களில் பெரும் சேதம். பாதைகள் தடமழிந்து போயுள்ளன. நட்டநடு ஊரில் வெள்ளக் காடு. நகரங்கள் பலவற்றின் உட்கட்டமைப்பு சிதைந்து போய், இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
வீடுகள், கடைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மரங்கள் முறிந்து விழுவதும் வேரோடு பிடுங்கப்படுவதும் இன்னொரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இன்னும் சில இடங்களில் தொடர்பாடல் துண்டிக்கப்பட்டுள்ளது. அலைபேசிகள் இயங்கவில்லை.
பாதுகாப்பற்ற பிரதேசங்களில்- தாழ் நிலங்களில்- வசிக்கும் மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறி வருகின்றனர்.
சிலர் பேரிடர் கால கட்டளைகளின் அடிப்படையில்- இழப்புகளைக் குறைக்கும் நோக்கில்- பலவந்தமாக வெளியேற்றப்படுகின்றனர்.
ஆறுகள் நிறைந்து விட்டன. நீர்த் தேக்கங்களும் குளங்களும் அணைகளும் நிரம்பி வழிகின்றன. சில இடங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டு விட்டன. ஆற்றுப் படுகைகளில் நீர் பரவிப் பாய்ந்தோடுகிறது.
மலைநாட்டின் பல இடங்களில் மண் மண் சரிவு பேரபாயமாக உருவெடுத்துள்ளது.
இதை எழுதிக் கொண்டிருக்கையில் ரம்பொடயில் 10 வீடுகளைக் காணவில்லை என்று செய்தி வருகிறது.
இதுவரை 50 இற்கும் அதிகமானோர்
இறந்துள்ளனர். இந்தத் தொகை இன்னும் அதிகரிக்கக் கூடும்.
பல இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ரயில் பாதைகள் பல சிதைந்து போயுள்ளன. நேற்றிரவு 8.00 மணிக்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் புறப்பட்ட ரயில் வண்டி, இன்று அதிகாலை வரை குருநாகலிலேயே தரித்து நிற்கிறது. முன்னேயும் போக முடியாமல் பின்னேயும் போக முடியாமல் பயணிகள் அந்தரத்தில் உள்ளனர்.
நாட்டின் மிகப் பெரிய நதியான மஹாவெலி கங்கை பெருக்கெடுத்துள்ளது. கம்பளை பகுதியில் இதன் தாக்கம் நம்ப முடியாத அளவுக்கு உள்ளது. அங்கு நள்ளிரவில் மீட்புப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இனிமேல்தான் மேலும் சில வான் கதவுகள் திறக்கப்படவுள்ளன. நாட்டின் அனைத்து நீரேந்தும் பிரதேசங்களும்- ஆறு, குளங்களை அண்டிய பகுதிகளும் அனர்த்த வலயங்களாக மாறியுள்ளன.
தென்கிழக்கில் மையம் கொண்டிருந்த டிட்வா புயல் வடக்கு நோக்கி நகர்கிறது. தரைப் பகுதியில் இப்படி புயல் நகர்வது, இதுவே முதல் தடவை என்கிறார்கள்.
சில இடங்களில் காற்றின் வேகம் 50-70 km/h ஆக உள்ளது. கொழும்பிலும் காற்றின் வேகம் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது.
அதிகூடிய மழையாக, மாத்தளையில் கடந்த 24 மணித்தியாலத்தில் 540 mm பதிவாகியுள்ளது. வடக்கில் சில இடங்களில் 300 mm இற்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்னும் பல இடங்களில் 200 mm மழைவீழ்ச்சி. இந்த மழை இன்னும் விடுவதாய் இல்லை.
கடல் அலையின் சீற்றம் அதிகரித்திருக்கிறது. கடல் கொந்தளிப்பு நிலவுகிறது. மீனவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வெள்ள நீரோடு இழுபட்டுச் செல்லாமல் படகுகளை வேறு இடங்களுக்கு நகர்த்தி வருகின்றனர்.
விவசாய நிலங்களும் பயிர்ச் செய்கையும் பாரியளவு பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. தொடர்ச்சியான மழையும் வெள்ளமும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
நாடெங்கிலும் பாதைகள் பல உடைந்து போயுள்ளன.
மத்திய மலைநாட்டுக்கான போக்குவரத்துப் பாதைகள் பல துண்டிக்கப்பட்டுள்ளன.
திரும்பும் திசையெல்லாம் அனர்த்தம். இதில் சிலர் குழந்தை குட்டிகளுடன் புதினம் பார்க்கப் போகிறார்கள். இந்த முட்டாள்தனம் வேண்டவே வேண்டாம்.
உயர்தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அரச துறை ஊழியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்ட விவாதம் இடைநிறுத்தப்பட்டு, நாடாளுமன்றம் இரு நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இராணுவம், கடற்படையினர் மற்றும் வான்படையினர் அவசர மீட்புப் பணிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட செயலக, பிரதேச செயலக மட்டங்களிலும் உள்ளூராட்சி மன்றங்களிலும், ஒருங்கிணைந்த அனர்த்த நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
நம்மால் மட்டுமே சமாளிக்க இயலாத பேரனர்த்தமாக இது மாறிவிட்டது. இன்னும் 3 நாட்களுக்காவது இதே அனர்த்த நிலை தொடரும் போல் தெரிகிறது.
ஜனாதிபதி அவசர கால நிலையை உடனடியாகப் பிரகடனம் செய்ய வேண்டும். வெளிநாட்டு உதவிகள் கோரப்பட வேண்டும்.
ஒவ்வொருவரும் தம்மாலான நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.
தேவையுடையோரைத் தேடிப்போய் உதவுவோம். முடிந்த வரை ஒருங்கிணைந்த நிவாரணப் பணிகளின் மீது கவனம் செலுத்துவோம்.
அனர்த்த நிவாரணத்தை கையாளும் இடர் முகாமைத்துவக் குழுக்களை ஒருங்கிணைப்பது இன்றியமையாத தேவையாகும்.
இந்த அசாதாரண நிலை நீங்க பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம்.

சிராஜ் மஷ்ஹூர்
வெள்ளி காலை சிந்தனைகள்.
28.11.2025