ஹட்டன் – நோர்வுட் – பொகவந்தலாவ பகுதிகளில் வெள்ள அபாயம்

காஸ்ட்ல்ரீ நீர்த்தேக்கத்துடன் தொடர்புடைய முக்கிய நீர்வழிகளில் ஒன்றான கெசல்கமுவ ஓயா அதன் கொள்ளளவைத் தாண்டி பெருக்கெடுத்தமையால், பொகவந்தலாவ பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் நீர் புகுந்துள்ளதுடன் சில கட்டிடங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மலைப்பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் அதிகரித்துவரும் நீர்வரத்து நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நோர்வுட், பொகவந்தலாவ, ஹட்டன் மற்றும் சுற்றியுள்ள தோட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக ஆறுகள், ஓடைகள் மற்றும் தாழ்வான பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள் நீர்மட்டத்தைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும், நுவரெலியா மாவட்டத்தின் நோர்வுட் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கனமழையின் காரணமாக ஹட்டன்–பொகவந்தலாவ–மஸ்கெலியா–பலாங்கொடை பிரதான வீதியில் டிக்கோயா மற்றும் வனராஜா தோட்டப் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு மண் மற்றும் கற்கள் அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன், மேலும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டின் பல பகுதிகளில் இன்றும் கனமழை தொடரக்கூடும் எனவும், சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகலாம் எனவும் வானிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்குமாறும், ஆறுகள், ஓடைகள் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ள மலைச்சரிவுகளுக்கு அருகில் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.