கீரை

(கருணாகரன்)

“சங்கர் மாரடைப்பினால் இறந்து விட்டார்” என்று காலையில் ஒரு நண்பர் . குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இப்போதுதானே 2.0 என்று ரஜினிகாந் நடித்த புதிய படத்தை வெளியிட்டார் சங்கர். அதற்குள் என்ன இப்படியொரு அவசரம்? என்று நீங்கள் யோசிக்கலாம். நான் கூட அப்படித்தான் எண்ணினேன். இறந்தது சினமா நெறியாளர் சங்கரல்ல. கிளிநொச்சியில் தனியார் நிறுவனமொன்றை இயக்கி வந்த சங்கரே.வயது – 35. நோய் – மாரடைப்பு. இவ்வளவு இளைய வயதில் மாரடைப்பா என்று நீங்கள் நெஞ்சிலே கையை வைக்கிறீர்கள். இதை விட இளைய வயதில் மாரடைப்புக்குத் தங்களைப் பரிசளித்துக் கொண்டிருக்கும் நிலை வந்து விட்டது. இதை உணர்ந்தால் உங்களுக்கே நெஞ்சில் வலியேறி விடும். சில மாதங்களுக்கு முன்பு சுவிற்சர்லாந்திலிருந்து பருத்தித்துறைக்கு வந்திருந்த இளைஞர் ஒருவர், மீண்டும் சுவிற்சர்லாந்துக்குத் திரும்பாமல் இவ்வுலகிலிருந்தே பயணமாகி விட்டார். அவருக்கு வயது 28. நாளை 20 வயதிற்குள்ளேயே மாரடைப்பு என்ற சேதிகள் வந்து நம்முடைய நெஞ்சில் உதைக்கக் கூடும்.

மாரடைப்புக்கு ஏராளம் காரணங்களை மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதில் முக்கியமானவை இரண்டு என்பது உலகறிந்தவை. ஒன்று உணவு முறை. இரண்டாவது, உடற்பயிற்சி அல்லது வேலை. சங்கர் இரவு பகலாக வேலை செய்யும் ஆள்தான். ஆனால், அவர் செய்யும் வேலை வியர்வையை வெளியேற்றுவதில்லை. பதிலாக கொழுப்பைச் சேர்ப்பது. குளிரூட்டிய அறையில் நாளொன்றுக்கு 15 மணித்தியாலங்களுக்குக் குறையாமல் இருப்பார். கணினித்துறையைப் கற்பித்துக் கொண்டும் அதில் சேவைகளைச் செய்து கொண்டும் இருந்தவர், மூளைச் சோர்வைப் போக்குவதற்காக அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டேயிருந்திருக்கிறார். உடலை வருத்தாமல் அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டேயிருந்தால் உடலை வளர்த்து நஞ்சைச் சேமிப்பதற்குச் சமம். அதுதான் சங்கருக்கும் நடந்திருக்கிறது.

இவ்வளவுக்கும் சங்கர் ஒரு காலம் கடினமான உழைப்பாளியாக இருந்திருக்கிறார். அவருடைய குடும்பம் 14, 15 மணிநேரம் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கிறது. சங்கர் அதிகாலை நான்கு, நான்கரை மணிக்கே எழுந்து, தோட்டத்தில் வேலை செய்திருக்கிறார். பள்ளியில் படிக்கிற காலத்தில் கூட தோட்ட வேலைகளில் பாதியைச் செய்து விட்டே படிக்கச் சென்றிருக்கிறார். போதாக்குறைக்கு விளையாட்டு வேறு. நல்லதொரு உதைபந்தாட்டக்காரராக. 22, 23 வயது வரை அவருடைய உடல் எந்தப் பக்கத்திலும் வளையக் கூடியமாதிரி இருந்தது. ஆனால், 32 வயதில் ஒரு பக்கமும் வளைய முடியாதவாறு ஆகி விட்டது. இடைப்பட்ட காலத்தில் அவர் தேர்ந்தெடுத்த தொழிலும் அது உருவாக்கிய வாழ்க்கையும் அப்படிச் செய்தது. தொழிலையும் உடலையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்குப் பதிலாக அவற்றின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு விட்டார் சங்கர். இறுதியில் சங்கரை மாரடைப்பிடம் ஒப்படைந்தன அவருடைய தொழிலும் உடலும்.

சங்கரைப்போல பல இளைஞர்கள் மரணத்தின் வாசலிலும் சாவின் விளிம்பிலும் உலாவிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அதைப்பற்றித் தெரியாதென்றில்லை. ஓரளவுக்குத் தெரியும். ஆனாலும் அவர்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. என்ன என்றாலும் நடப்பது நடக்கட்டும் என்ற மாதிரிப் பலரும் நடந்து கொள்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை வாழ்க்கையில் கொண்டாட்டம் முக்கியமானது. அதிலும் இளவயதில் கொண்டாடாமல் வேறு எப்போது கொண்டாட முடியும் என்று எண்ணுகிறார்கள். இதற்காக அவர்கள் தங்களை முற்றாகவே இழந்து கொண்டிருக்கிறார்கள்.

பொதுவாக இப்பொழுது யாரும் வீட்டில் வேலை செய்வதில்லை. அதிலும் நகர்ப்புறங்களில் உள்ள இளைஞர்கள் உடலை வருத்தி வேலை செய்வது குறைந்து விட்டது. பள்ளிப்பருவத்தில் படிப்பைக் காரணமாகச் சாட்டிக் கொண்டு, வீட்டு வேலைகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்கிறார்கள். பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு ஜாலியாக ஊர் சுற்றுவது. பம்பலடிப்பது. பெடியளோடு சேர்ந்து கொண்டாடுவது என வாழ்க்கையை வேறு திசையில் நகரத்திக் கொண்டாடுவதற்கு முயற்சிக்கிறார்கள். இது அப்படியே கட்டவிழ்ந்து எப்படியெல்லாமோ ஆகி விடுகிறது. அதைத்தான் நாம் தினமும் செய்திகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வீடுகளில் பெண் பிள்ளைகள் ஓரளவுக்கு வேலை செய்தாலும் ஆண்கள் லாவகமாகத் தப்பித்துக் கொண்டு விடுகிறார்கள். அப்படித் தப்பித்துக் கொள்கிறவர்களை இப்படி நோய்கள் வந்து லாவகமாகத் தட்டிக் கொண்டு போகின்றன. அல்லது அவர்கள் தாங்களாகவே சென்று விபத்துகளிலும் வன்முறைகளிலும் சிக்கி மாண்டு போகிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் நமது எண்ணங்களில் ஏற்பட்ட குறைபாடுகளே. வீடுகளில் வேலை செய்வதும் பிள்ளைகளைக் கொண்டு வேலை செய்விப்பதும் தவறு என்ற எண்ணமாகும். ஆனால், சீனா, கொரியா போன்ற நாடுகளில் பள்ளிக் காலத்திலேயே பிள்ளைகள் வினைத்திறனுடன் தொழில் செய்யும் ஆற்றலைக் கொண்டிருக்கிறார்கள். புதிய தொழில் நுட்பத்திறன்களை பரீட்சித்துப் பார்க்கிறவர்களாகவும் புதிய தொழில் நுட்பத்தில் ஈடுபடுகின்றவர்களாகவும் இருக்கிறார்கள். இந்தப் பயற்சியினால் வளர்ந்தவுடன் தங்கள் உற்பத்திகளின் மூலமாக உலகாள முற்படுகிறார்கள்.

ஆனால், நம்முடைய சூழலில் மிக எளிதாகச் செய்யக் கூடிய கீரையைக் கூட உற்பத்தி செய்ய முடியாமல் வெளியிலிருந்து இறக்கிக் கொண்டிருக்கிறோம். “கிளிநொச்சிப் பொதுச் சந்தைக்கு தினமும் வெளியூர்களிலிருந்து வரும் கீரையின் மூலமாக மாதமொன்றுக்கு கிட்டதட்ட15,000,000/= கிளிநொச்சியை விட்டு செல்கின்றது. இது கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள சந்தையில் மட்டும். கீரையைத் தவிர அனேகமாக அனைத்துமரக்கறிகளும் வெளிமாவட்டத்தில் இருந்து ஆக்கிரமிப்பதால் கிட்டதட்ட மாதம் ஒன்றுக்கு 150 கோடி ரூபாய்கள் மரக்கறியால் மட்டும் கிளிநொச்சியைவிட்டு நிரந்தரமாக அகன்று செல்கின்றது. இந்தப் பணம் மீண்டும் முதலீடாக கிளிநொச்சிக்கு வருவதில்லை. இதுவே கிளிநொச்சி விவ்சாயிகளினால் அந்தகீரையாகவும் மரக்கறியாகவும் உற்பத்தி செய்யப்படுமாக இருந்தால் அந்த பணம் கிளிநொச்சியிலேயே மீள் சுழற்சியாகும் என்கிறார் ராஜ் செல்வபதி. ஊரிலும் உலகத்திலும் என்ன நடக்கிறது என்பதைக் கூர்மையாக அவதானித்து, அதிலுள்ள சரி பிழைகளைச் சமூகத்திற்குச் சொல்லும் துணிச்சலுள்ளவர் ராஜ்.

சமூக நடப்புகளில் சரி பிழைகளைத் தெரிந்தாலும் அதைப் பகிரங்கமாகப் பேசும் துணிச்சல் பலருக்கிருப்பதில்லை. நமக்கெதற்கு சோலி அல்லது வீண் வம்பு என்று ஒதுங்குவோரே இன்று அதிகம். அவர்கள் பெற்றுக் கொண்ட அறிவுக்கு எதிரான செயல் இது. ஒருவருக்கான கல்வி அறிவென்பது, அவர் தானறியும் உண்மைகளின் பக்கம் நிற்பதற்கும் தவறுகளை எதிர்ப்பதற்குமான துணிவைக் கொடுக்க வேணும். அதுவே அறமும் கூட. இல்லையெனில் அறிவிற்குச் செய்யும் அநீதி அதுவாகும். ராஜ், அறத்தின் வழி சிந்திப்பவர்.

அவர் சொல்கிற மாதிரி கிளிநொச்சி நகரிலிருந்து கீரையின் மூலமாகவே வெளி மாவட்டங்களுக்கு இவ்வளவு பணம் போகிறது என்றால், இந்த மாவட்டம் வறுமையில் வாடாமல் என்ன சொர்க்கத்திலா சீவிக்க முடியும்? மிக எளிதாக உற்பத்தி செய்யக் கூடிய கீரைக்காக ஒரு விவசாய மாவட்டத்திலிருந்து இவ்வளவு பணம் வெளியே செல்வதென்பது கொடுமையானது மட்டுமல்ல, முட்டாள்தானமும் கூட. மட்டுமல்ல, சங்கரைப்போல இளைஞர்கள் பாதியிலே வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டியதுதான்.

இவ்வளவுக்கும் “வடக்கின் நெற்களஞ்சியம், இலங்கையின் பச்சைச் சொர்க்கம், முழுமையான விவசாய மாவட்டம்” என்ற புகழராங்கள் வேறு பேசப்படுகிறது. இதற்கேற்ற மாதிரிச் சிலர் 50, 60 ஏக்கரில் நெற்செய்கை செய்கிறார்கள்தான். இரண்டு போக நெற்கை நடப்பதும் உண்மை. ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் நெல் விளைகிறது என்பதும் உண்மையே. ஆனால், ஏனைய பயிர்ச்செய்கை அந்தளவில் இல்லை. குறிப்பாக மரக்கறிச்செய்கை, பழ உற்பத்தி, மண்கடலை, உழுந்து, பயறு, சோளம் போன்ற சிறுதானியங்கள்.

ஒருகாலம் இரணைமடுக்குளத்துக்கு வடக்கிலுள்ள திருவையாறில் வாழையும் மிளகாயும் செய்கை பண்ணப்பட்டன. இதற்குத் தோதாக இரணைமடுக்குளத்திலிருந்து ஏற்றுநீர்ப்பாசனம் நடந்தது. இந்த மாதிரி ஏற்று நீர்ப்பாசனம் விசுவமடு, பிரமந்தனாறு, வவுனிக்குளம், அக்கராயன்குளம், முத்தையன்கட்டு, உடையார்கட்டு ஆகிய குளங்களிலும் நடந்தன. குளங்களிலிருந்து வாய்க்கால் வழியே வயலுக்கு நீர் பாய்வது வேறு. மேட்டு நிலத்துக்குப் பாய்வது வேறு. வயல் நிலம் பதிவாக இருப்பதால் இயல்பான பாசனம் அதற்குப் போதும். மேட்டு நிலத்துக்கு அப்படிச் செய்ய முடியாது. அதற்கு இயந்திரங்களின் மூலம் அல்லது மின்சாரத்தின் மூலம் நீரை மேலுயர்த்திப் பாசனம் செய்ய வேணும். இதற்கான வாய்க்கால்களை வேறாக – கொங்கிறீற்றினால் அமைக்க வேண்டும். இது பெரும் செலவுடைய திட்டம். ஆனால், அப்படித்தான் இந்தத் திட்டங்களுக்காகச் செலவழிக்கப்பட்டது. யுத்தத்தின்போது ஏறக்குறைய எல்லா ஏற்று நீர்ப்பாசனங்களும் கெட்டுவிட்டன. யுத்தம் முடிந்தபிறகு அநேகமானவை மீள உயிர்ப்பிக்கப்பட்டுள்ளன. வட்டக்கச்சி – இராமநாதபுரத்தில் உள்ள புழுதியாறுக்குளத்தில் கூட ஏற்றுநீர்ப்பாசனத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆனால், இந்த வாய்ப்பையும் வசதியையும் பயன்படுத்துவோர் மிகக் குறைவு. காணிகள் எல்லாம் தரிசாகக் கிடக்கின்றன. குளங்களில் தாராளமாக நீர் உண்டு. கிளிநொச்சியிலிலேயே விவசாய ஆராய்ச்சி நிலையம், விதை உற்பத்தி நிலையம், மண்வள ஆய்வு நிலையம், விவசாய விரிவாக்கத் திணைக்களம், விவசாயப் பயிற்சிக் கல்லூரி, கமத்தொழில் சேவை நிலையம், நீர்ப்பாசனத்திணைக்களம் என விவசாயத்துக்குத் தேவையான அனைத்தும் உள்ளன. போதாக்குறைக்கு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடமும் கூட உண்டு.

ஆனால், இவை ஒன்றுக்கும் ஒன்றொடு ஒன்று எனத் தொடர்பில்லை. எந்த விவசாயிக்கும் இங்கே ஒரு விவசாய பீடம் இயங்குகிறது என்று தெரியாது. அதைப்போல விவசாயிகள் என்ன செய்கிறார்கள்? அவர்களுடைய பிரச்சினைகள் என்ன? விவசாயத்தில் என்னவெல்லாம் நடக்கின்றன என்று விவசாயத்தைப் பட்டப்படிப்பிற்காகப் படிக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தெரியாது. அவரவர் தனித்தனி உலகமாகத் தனித்திருக்கிறார்கள். ஒவ்வொருவருடத்திலும் தனியாக உள்ளது தனிச் சாம்ராஜ்ஜியங்கள். ஆனால், ஒருவருக்கும் ஒரு மண்ணும் தெரியாது என்ற அளவில்தான் நிலை. இல்லையென்றால், இவ்வளவும் இருந்தும் ஏராளமானோர் வேலையில்லாமல் இருக்க முடியுமா? இளைஞர்கள் எப்படி ஊர் சுற்றலாம்? எப்படி இளைய வயதில் மாரடைப்புகள் ஏற்படும்?

எனக்குத் தெரிந்த மூன்று நண்பர்கள் உயர் கல்வியில் விவசாயத்தைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். படித்த பிறகு ஒருவர் வங்கி ஒன்றில் மேலாளராகி விட்டார். அங்கே அவர் விவசாயிகளுக்கான கடன் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதனால் விவசாயிகள் முன்னேறுகிறார்களொ இல்லையோ வங்கி வளர்ச்சியடைகிறது. இன்னொருவர் விவசாய உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் காபரேட் நிறுவனமொன்றில் உயர் பதவியிலிருக்கிறார். மற்றவர் உணவு பதனிடும் தனியார் நிறுவனமொன்றில் பொறுப்பான பதவியிலிருக்கிறார். இதைப்போல இப்பொழுது படித்துக் கொண்டிருப்போரும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் சேர்ந்து விடுவார்கள். காணிகள் தரிசாகிறதைப் பற்றிய கவலைகள் யாருக்குமில்லை. காணிகள் மட்டுமல்ல சனங்களும் சமூகமும்தான் தரிசாகிக் கொண்டிருக்கிறது.

“கங்குல் கீரை என்ன விலை?” என்று கேட்கும் குரல் கேட்டுத்திரும்பிப் பார்க்கிறேன். கண்டி, நுவரெலியா, தம்புள்ளவிலிருந்து வந்த மரக்கறிகளை இறக்கிக் கொண்டிருந்த வாகனத்திற்கு அருகில் இரண்டு போர் விலை கேட்டுக்கொண்டிருந்தார்கள்.