நடுக்கடலில் மரணித்த காரைதீவு மீனவர் சிறிகிருஸ்ணனுக்கு, காரைதீவு பிரதேச சபையில் அனுதாபம் நிறைவேற்றப்பட்டதுடன், அவரது மூன்று பெண் பிள்ளைகளில் ஒருவருக்கு தற்காலிக சிற்றூழியர் தொழிலொன்றை வழங்கவும் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காரைதீவு பிரதேச சபையின் 20ஆவது மாதாந்த அமர்வு, சபை மேயர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில், சபாமண்டபத்தில் இன்று (14) நடைபெற்றது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெண்உறுப்பினர் திருமதி சின்னையா ஜெயராணி, “மரணித்த மீனவரின் குடும்பத்துக்கு உண்மையில் உதவ வேண்டுமானால் மீண்டும் நிதி வழங்குவதை விடுத்து, பிள்ளைகளில் ஒருவருக்கு ஒரு சிறுதொழிலையாவது வழங்குங்கள். அது அக்குடும்பத்துக்கு பேருதவியாகவிருக்கும்” என்ற விசேட பிரேரணையை முன்வைத்தார்.
இப்பிரேரணையை, தவிசாளர் உள்ளிட்ட 11 உறுப்பினர்கள் மனிதாபிமானத்தோடு கையை உயர்த்தி ஆதரித்தனர்.