விரைவில் விக்கியுடன் பேசி பேரவையில் இணைவேன் அதன் நோக்கங்கள் சிறந்தவை என்கிறார் கருணா. தமிழ் மக்கள் பேரவையின் நோக்கங்கள் சிறந்ததாக இருப்பதனால், வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரனை விரைவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி அப்பேரவையில் உத்தியோகபூர்வமாக இணைந்து செயற்படவுள்ளேன் என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்தார்.
புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முறையாக கையாள்வதற்கு சகல தமிழ் மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைப் பொன்றுக்கான தேவை இருந்து வந்தது. அந்தத் தேவைப்பாடு இப்போது தமிழ் மக்கள் பேரவையாக வெளிக்கொணரப்பட்டுள்ளது. யுத்தத்தின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு உரிய தலைமைத்துவத்தை வழங்கத் தவறிவிட்டது. அக்கட்சி தற்போது உறுதியற்ற நிலையில் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது.
அக்கட்சிக்குள் ஒருமித்த கருத்தை காணமுடியாதுள்ளது. மேலும் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் உள்நாட்டில் ஒரு கருத்தையும் வெளிநாடுகளில் மற்றுமொரு கருத்தையும் வெளிக்காட்டியது. அத்துடன் அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாக இருந்து அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுவதனால் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, தமிழ் மக்களின் பிரச்சினைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முறையாகக் கையாளத் தவறியமையினாலேயே தமிழ் மக்கள் பேரவை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த தமிழ் மக்களின் குரலாக தமிழ் மக்கள் பேரவை திகழும் என்கின்ற நம்பிக்கை எனக்குள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் நோக்கங்கள் சிறந்ததாக இருப்பதனால், விரைவில் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துப் பேச்சுவார்ததை நடத்தி அப்பேரவையில் உத்தியோகபூர்வமாக இணைந்துது செயற்படவுள்ளேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் விமர்சிப்பது போல் இப்பேரவையினால் தமிழ் மக்களுக்கு பாதகத்தன்மை ஏதும் இல்லை.
மாறாக மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான உபாயமாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. குறித்த அமைப்பில் அங்கம் வகிப்பவர்களில் ஏராளமானோர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்றும் சிலர் விமர்சிக்கின்றனர். எனினும், தேர்தல்களில் தோல்வியடைந்தவர்கள் இனிவரும் தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அது மாத்திரமல்லாமல், தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பலரும் விரைவில் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து கொள்ளவுள்ளனர். இதேவேளை, தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள எம்.பி.க்கள் சிலர் பல முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து அதன் பின்னர் விடுதலைப்புலிகளின் அழுத்தத்தின் காரணமாக தேர்தலில் வெற்றிபெற்ற சம்பவங்களையும் மறந்துவிடக்கூடாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.