வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் குறுகிய காலகட்டத்துள் மூவர் மர்மமான முறையில் உயிர் நீத்துள்ளமை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே, இச் சம்பவங்களின் பின்னணிகள் உடனடியாகக் கண்டறியப்பட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகார அமைச்சர் சாகல ரத்னாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள செயலாளர் நாயகம் அவர்கள், கடந்த 24ம் திகதி கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்திக்கருகில் 52 வயதுடைய முனியாண்டி குமாரராசா என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மறுநாள் 25ம் திகதி, கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் கிணறொன்றில் இருந்து 29 வயதுடைய பொன்னம்பலம் சிவகரன் எனும் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதே தினம் திருகோணமலை, சம்பூர் 7ம் வட்டாரத்தைச் சேர்ந்த குகதாஸ் தருசன் எனும் சிறுவன் அப்பகுதி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இவ்வாறான சம்பவங்கள் எமது மக்களிடையே பதற்றத்தையும், பல்வேறு சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளன. இவை உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் இப் பகுதிகளில் மேலும் வலுப்பெற வேண்டியதன் அவசியத்தையே இச் சம்பவங்கள் உணர்த்துகின்றன. எனவே, இதனைத் தடுத்து நிறுத்துவதற்கும், இனியும் தொடராதிருப்பதற்கும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சரிடம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.