(என்.கே. அஷோக்பரன்)
ஹிஷாலினி என்ற 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரமும் அந்தச் சிறுமியின் அகால மரணமும், பல்வேறு வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளன. இனவாதம் இந்த நாட்டுக்குப் புதியதல்ல. 16 வயது தமிழ்ச்சிறுமி, முஸ்லிம் இன அரசியல் செய்யும், ஒரு முஸ்லிம் அரசியல்வாதியின் வீட்டில் கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, தீக்கிரையாகி மரணித்த கொடூரம், இரண்டு சமூகங்களைச் சார்ந்தவர்கள் இடையே, இனரீதியான வாக்குவாதங்கள் சமூக ஊடகப்பரப்பில் இடம்பெறும் நிலையைத் தோற்றுவித்துள்ளது.
எங்கெல்லாம் இனவெறி தலைதூக்குகின்றதோ, அங்கெல்லாம் அறிவு செத்துவிடுகிறது. ஒரு 16 வயது சிறுமியின் கொடூர மரணத்தை, நியாயமாக விசாரித்து, அதற்கு நீதி வழங்க வேண்டும் என்கிற கருத்தை அல்லவா, மதியுள்ள மக்கள் வலியுறுத்த வேண்டும். மாறாக, குற்றம்சாட்டப்பட்டவன், தான் சார்ந்த இனத்தவன் என்பதால், குற்றம் சாட்டப்பட்டவனுக்கான அபத்த நியாயங்களை வாதமாக முன்வைப்பதெல்லாம், இனவாதத்தால் மழுங்கிய மூளையின் சிந்தனையல்லாது வேறென்ன?