(ஜே.ஏ.ஜோர்ஜ்)
‘சிவில் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு வடக்கு பிரதேசத்தில் ஊழியர்களைப் பெற்றுக்கொண்ட போது பலர் அதனை எதிர்த்தனர். இராணுவத்துக்கு ஆள் சேர்க்கவும் தேர்தலை முன்னிட்டும் இந்த ஆட்சேர்ப்பு நடவடிக்கை எனப் பலரும் வதந்திகளைப் பரப்பினர். எனினும், நாம் இந்தப் பிரச்சினைகளைக் கண்டு சோர்ந்து விடவில்லை. இப்பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நாம் மேற்கொண்ட முயற்சி, இன்று நல்ல பலனைக் கொடுத்துள்ளது.
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஊடாக இன்று வடக்கில் 3,700 பேருக்கும் அதிகமானோர் நல்ல சம்பளத்துடன் நிரந்தர நியமனத்துடன் தொழில் செய்கின்றனர். அதனையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன்’ என சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு இணைந்த கட்டளை அதிகாரி லெப்டினன் கேர்ணல் டபிள்யூ.டபிள்யூ.ரத்னபிரிய பந்து தெரிவித்தார்.
கிளிநொச்சி விஸ்வமடு பிரதேசத்தில் அமைந்துள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு இணைந்த கட்டளை தலைமையகத்துக்கு விஜயம் செய்த தென்பகுதி ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது, வெள்ளிக்கிழமை அவர் இவ்வாறு கூறினார்.
‘வடக்கில் சிவில் பாதுகாப்பு திணைக்களத்துக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஊழியர்களின் ஊடாக நாம் பாரியளவிலான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இதன் காரணமாக அவர்கள் மாதாந்தச் சம்பளம் மற்றும் நிரந்தர நியமனத்தைப் பெற்றுள்ளனர். இன்று சுமார் 3,700க்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளதுடன் 25,000த்துக்கும் அதிகமானவர்கள் தமக்குத் தொழில் கேட்டு எம்மிடம் பதிவுசெய்துள்ளனர்.
30 வருட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த இந்த மக்கள் இவ்வளவு காலம் ஒரு தலைமையின் கீழ் செயற்பட்டு வந்தனர். யுத்தத்தின் நிறைவு காரணமாக அவர்களுக்கான தலைமைத்துவம் இல்லாமல் போனது. எனவே, திக்கற்றவர்களாக நின்ற அவர்களைப் பொருளாதாரத்திலும் கலாசாரத்திலும் ஊக்குவிக்கவும் அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும் நாம் செயற்பாடுகளை மேற்கொண்டோம். அதன் முதற்கட்டமாக அவர்களுக்குத் தொழில்வாய்பை பெற்றுக்கொடுப்பதற்காக சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் இணைத்துக்கொண்டோம்.
இதற்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். முடிந்தால் 100 பேரை சேர்த்துக் காட்டுங்கள் என்று சவால் விடுத்தனர்;. ஆனால், இன்று வடக்கில் 3,700 பேர் உள்ளதுடன் 25ஆயிரம் பேர் பதிவுசெய்துள்ளனர்.
எம்மைப் பற்றி இங்குள்ள மக்களுக்கு நன்றாகத் தெரியும். தமது அரசியல் இலாபத்துக்காக சிலர் அதனைத் தவறான கண்கொண்டு வதந்திகளைப் பரப்பி வருகின்றனர்’ என்றார்.
அத்துடன், இந்த மக்களைத் தெற்கு மக்களுடன் ஒன்றிணைப்பதற்கான உறவுப் பாலமாகவும் இந்தத் திணைக்களம் காணப்படுகின்றது’ எனவும் அவர் குறிப்பிட்டார்.
விஸ்வமடு பிரதேசத்தில் 2012ஆம் ஆண்டு 10ஆம் மாதம் 01ஆம் திகதி சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் காரியாலயம் ஆரம்பிக்கப்பட்டது.
அன்றைய நாட்களில் சுமார் 15 ஊழியர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கட்டளை தலைமையகத்தில் தொடர்ந்து பல ஊழியர்கள் ஆர்வமாக இணைந்து கொண்டு தமக்கான தொழில்வாய்ப்பை பெற்றுக்கொண்டனர்.
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஊடாக நெற்செய்கை மற்றும் விவசாயம், அப்பியாசக் கொப்பிகள் தயாரிப்பு, ஆடைத் கைத்தொழில் உள்ளிட்ட பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அத்துடன், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஊடாக வடக்கு மாகாணத்தில் சுமார் 270 முன்பள்ளிகள் நடத்தப்படுகின்றன. அவற்றில் 512 முன்பள்ளி ஆசிரியர்கள் பணிபுரிவதுடன் 9,722 சிறார்கள் கல்வி பயிலுகின்றனர்.
இதுவரையான நான்கு வருடங்களில் சுமார் 40,533 முன்பள்ளி சிறார்களுக்கு கல்வி வழங்கப்பட்டுள்ளதுடன் இதில் 20,236 ஆண், 20,297 பெண் சிறார்கள் உள்ளடங்குகின்றனர்.
‘முதன் முதலாக முன்பள்ளிகளை நாம் ஆரம்பித்தபோது இராணுவத்தால் நடத்தப்படும் பள்ளிகள் என்றும் அதற்கு மாணவர்களை அனுப்ப வேண்டாம் என்றும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டனர். எனினும் எம்மீது கொண்ட நம்பிக்கையால் மக்கள் அதனை நம்பவில்லை.
இன்று அங்குள்ள ஆசிரியர்களையே நியமித்து அவர்களுக்கு அரசாங்க ஊழியர்களின் சலுகையுடன் நிரந்தர வேலைவாய்ப்புப் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் ஆர்வமாக தமது சிறார்களை அனுப்புகின்றனர். நாம் முன்பள்ளி ஆசிரியர்களின் செயற்பாடுகளைச் சோதிக்க அவ்வப்போது திடீரென அதிகாரிகளை அனுப்பி சோதிப்பதால் இவர்கள் தமது கடமையை ஒழுங்காக முன்னெடுக்கின்றனர். இது ஏனைய முன்பள்ளிகளை விட எமது முன்பள்ளிகள் சிறப்பாக உள்ளமைக்குக் காரணமாகும்’ என்கிறார் கட்டளை அதிகாரி.
இதேவேளை, ‘கிளிநொச்சியில் பல்வேறு இடங்களின் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தால் பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதில் கொழுந்துபுலவு பண்ணை மிகவும் முக்கியமானது’ என்கின்றனர் அங்கு பணிப்புரியும் ஊழியர்கள்.
இங்கு நெற்செய்கையுடன் ஏனைய உப பயிர்களும் பயிர்செய்யப்பட்டுள்ளதுடன் இந்த பண்ணைக்கென தனியான நீர்த்தேக்கமொன்று உருவாக்கப்பட்டுள்ளமை இந்தப் பண்ணையின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.
சிவில் திணைக்கள ஊழியர்களின் பங்களிப்புடன் 2015.11.08 அன்று திறந்துவைக்கப்பட்ட கொழுந்துபுலவு நீர்த்தேக்கத்தை உருவாக்குவதில் முன்னின்று செயற்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் டேவிட் தேவராஜ் என்பவர் கருத்து தெரிவிக்கையில்,
‘இந்தப் பண்ணையின் விவசாய நிலத்துக்கு நீரைப் பெற்றுக்கொள்வது சிரமமாக இருந்தது. அத்துடன், இங்கிருந்து நீர் விரயமாக கடலில் சென்று கலந்துகொண்டிருந்தது. இது தொடர்பில் கட்டளை அதிகாரி ரத்னபிரிய பந்துவிடம் தெரிவித்த போது, நீர்தேக்கம் அமைக்க ஆலோசனை வழங்கினார். அதனையடுத்து, சிவில் திணைக்கள ஊழியர்களின் பங்களிப்பு மற்றும் கடின முயற்சியின் ஊடாக இந்த நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டது’ என்றார்.
இந்தப் பண்ணையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் இருந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் உறுப்பினர்கள் சிலரும் சாதாரண மக்களுடன் இணைந்து பணிபுரிகின்றனர். ‘சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் இணைந்ததையடுத்து, இதுவரை தொழில் இல்லாமல் சிரமப்பட்ட எமக்கு நல்ல சம்பளத்துடன் நிரந்தரத் தொழில் கிடைத்துள்ளது. இதன் மூலம் எமது வாழ்ககையை மகிழ்ச்சியாகக் கொண்டு செல்ல முடிகின்றது’ என அங்கு பணிப்புரியும் உருத்திரபுரத்தைச் சேர்ந்த சுகிர்தா, அமுதா ஆகியோர் தெரிவித்தனர். சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் இணைந்துகொண்டவர்கள், பயிர்செய்கை கைத்தொழில் போன்றவற்றுக்கு மட்டும் இணைத்துக்கொள்ளப்படவில்லை. நாடகம், நடனம் மற்றும் கால்பந்தாட்ட அணி என்பவற்றிலும் இவர்கள் உள்ளனர்.
‘எமது கால்பந்தாட்ட அணி, தேசிய ரீதியில் நடைபெற்ற பல போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. எமது நடன மற்றும் நாடக குழுவினர் தேசிய மட்டப் போட்டிகளில் முதலிடங்களைப் பெற்றுள்ளனர்’ என கட்டளை அதிகாரி கூறினார்.
இவர்களது பாடகர் குழுவில், விடுதலைப் புலிகள் அமைப்பின் பாடகரான சாந்தன் என்பவரின் மகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான பல செயற்பாடுகளுக்கு மத்தியில் இம்மக்களின் வழிபாட்டுத் தேவைகளுக்கான இரண்டு ஆலயங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டளை அதிகாரி ரத்னபிரிய பந்துவின் சிந்தனைக்கு அமைய கொழுந்துபுலவு பண்ணையில் புதிதாக அமைக்கப்பட்ட கொழுந்து பிள்ளையார் ஆலயம், சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அத்துடன், வட்டகச்சி பிரதேசத்தில் ஆலயமொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
இந்த நிகழ்வுகளின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேககம கலந்துகொண்டார்.
இதேவேளை, கிளிநொச்சி விஸ்;வமடுவில் உள்ள இணைந்த கட்டளை தலைமையத்தில் ஆயுதங்கள் தரித்த வீரர்கள் எவரையும் காணமுடியவில்லை. இது தொடர்பில் விவரிக்கின்றார் கட்டளை அதிகாரி பந்து,
‘யுத்தத்தில் இருந்து மீண்டு வந்த இந்த மக்கள் முன்னாள் ஆயுதம் தரித்த வீர்கள் இருந்தால் அவர்களுக்கு அச்சம் ஏற்படும். அல்லது, ஆயுதங்களைக் காணும் போது தமது பழைய வாழ்க்கைக்கு திரும்பும் எண்ணங்கள் எழக்கூடும் எனவே, இது சாதாரண பணியிடம் போல அமைய வேண்டும் என்பதற்கான நாம் ஆயுதங்களைக் தவிர்த்துவிட்டோம்’ என்றார்.
இறுதி யுத்தத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் யுத்தத்தின் வடுக்களிலிருந்து அவர்களை மீட்டெடுக்கவும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் முன்னெடுத்துள்ள இந்த நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததே. நீண்ட காலமாக தொழில் இல்லாமல் இருந்த இம்மக்கள், இந்தத் திணைக்களத்தின் ஊடாக வழங்கப்பட்ட தொழில் வாய்ப்பின் ஊடாக இன்று மகிழ்ச்சியாகத் தமது வாழ்க்கையை முன்னெடுகின்றனர். இதனை, அந்த ஊழியர்களின் வார்த்தைகள் மற்றும் மலர்ந்த அவர்களின் முகத்தின் ஊடாகவும் அவர்களிடம் உரையாடியதன் மூலமும் எம்மால் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்து.
வெளியில் இருந்து பார்ப்பவர்கள் எவ்வாறு கூறினும் அங்கு பணிபுரியும் ஊழியர்;கள் மகிழ்ச்சியாக உள்ளதாகவே தெரிவிக்கின்றனர். சிவில் திணைக்களத்தின் வடக்கு – தெற்குக்கான இந்த உறவுப் பாலம் என்றும் தொடரவேண்டும் என்பதே அங்குள்ள அனைவரின் விருப்பமாகும்.