சர்வதேசப் பெண்கள் தினம்.
(சாகரன்)
இன்று சர்வதேசப் பெண்கள் தினம். வருடத்தின் ஒவ்வொரு நாட்களையும் ஒரு தினமாக பிரகடனப்படுத்தி அன்றுடன் அதற்கு முற்றுப் புள்ளி வைத்து மீண்டும் அடுத்த ஆண்டு நினைவு கூரும் செயற்பாட்டின் வடிவங்கள் தற்போது எல்லாம் முன்னிலை பெற்று வருகின்றன. இதில் அன்னையர் தினம், தந்தையர் தினம், பெண்கள் தினம், தொழிலாளர் தினம் என்பன அன்றுடன் இத் தினங்களுடன் சம்மந்தப்பட் விடயங்கள் ‘கொண்டாடப்பட்டு ஏனைய தினங்களில் இவற்றின் தாற்பரியங்களை மறக்கும் வடிவங்களை முன்னிறுத்தும் உலகின் புதிய ஒழுங்கிற்குள் நாம் வீழ்ந்து வருகின்றோம் என்பதை சற்ற ஆழமாகப் பார்த்தால் புரியும்.
தாய்மை என்ற சிறப்பியல்பே பெண்ணை மற்றைய எதனையும் விட உயர்த்தி முன்னிலைப்படுத்திக் காட்டுகின்ற விடயம் என்பேன் நான். தாய்மையை எல்லோராலும் அடைய முடியாது என்பதே இதற்கான சிறப்பு அம்சம் என்பதற்கு அப்பால் இறக்கி வைக்க முடியாமல் சுமந்து, மரணத்தின் விழிப்பிற்கே சென்று உயிர் பிரவாக்கத்தின் முழுப் பகுதிக்கும் பொறுப்பேற்பவளே தாய் ஆவாள். ஒரு கருத்து வழங்கலில் தமிழ நாட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திருநங்கை சுதா தன்னால் தாய்மை அடைய முடியாது என்பதன் வலியே தன்னை மற்றய எதனையும் விட பாதித்துள்ளது என்றார்.
இதனை காணொளியில் பார்த்த நான் தாய்மையின் முழுமையை உணர இவரின் கருத்துரை மேலும் வாய்பை ஏற்படுத்தியது. பெண்களை உயிரை சுமக்கும் இயந்திரமாகவும், போகப் பண்டமாகவும், சேவகம் செய்யும் அடிடையாகவும், சமூகத்தில் பால் வேறுபாட்டால் தாழ்ந்தவள் என்றும் கையாளப்படுவது எந்தவகையிலும் ஏற்புடையன அல்ல. உயிரைச் சுமக்காமலும் தாய்மையை அடையலாம் ஆனால் சுமையின் சுகமும், பிரசவிக்கும் வலியும், வலியின் பின்னரான சந்தோஷப் பிரவாக்கத்தின் உச்சங்களையும் தாய்மை அடைய முடியலாமா என்றால்…. என்னால் இதற்கு விடை காண முடியவில்லை.
ஆதிப் பொதுவுடைமைச் சமூகம் தாய் வழிச் சமூகமாக ஆரம்பித்து பின்பு உழைப்பினால் உபரிகள் உருவானபோது தந்தை வழி ஆண் மேலாதிக்க சமூக மாறியது. இன்று உலகின் மிகச் சிறிய பகுதி பெண்களின் பொருளாதாரச் சுதந்திரம் என்பதை முன்னிலைப்படுத்தி குடும்ப உறவுகளை முன்பு(தற்போதும்) ஆண்கள் சிதைத்தது போன்ற செயற்பாடுகளை பெண்கள் தரப்பலிருந்தும் உருவாக வழிவகுத்திருக்கின்றது. நியூகுளியர் குடும்பங்கள் என்ற புதிய வாழ்க்கை முறை உலகில் மிக உயர்ந்தது சமூகமாக வாழுதல் என்பதுவும் இதற்கு ஆதாரமாக இருப்பது குடும்பமாக வாழுதல். என்பதை உடைத்தெறிய புதிய ‘ஜனநாயகம்’ களை வழங்கியிருக்கின்றது.
சுகமாக வாழுதல் குடும்பமாக கூடிக் குதூகலித்தல் என்பவற்றிற்கு அடிநாதமே ஆண், பெண், திருநங்கை என்ற பால் பேதமற்ற வாழ்க்கை முறையாகும் இதற்கு சகல பால் இனரும் இணைந்தே போராடவேண்டும். உலகில் நடக்கும் அனைத்துப் போர்களிலும் அதிக அழிவுப் பொருளாக்கப்படுவது பெண்களும் அவர்களால் காவப்படும் குழந்தைகளும் ஆகும். இது நம்நாட்டு ஈழப் போரிலும் வலிகளையும் வழுக்களையும் விட்டுச் சென்றிருக்கின்றது. இங்கும் கைம் பெண்களை போகப் பொருளாக்கும் காமுகர்களே மேலோங்கி இருப்பது கண்டனத்திற்குரியது. இவர்களுக்கு இனி ஒரு விதி செய்வோம் என்று இந் நாளிலும் உறுதி பூண்போம்.