புதிதாகத் தாம் உருவாக்கியுள்ள அரசியல் கூட்டணி சமஸ்டித் தீர்வை நிராகரிக்கும் என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அண்மையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈபிடிபி, ஈரோஸ், ஜனநாயகப் போராளிகள் கட்சி உள்ளிட்ட 10 கட்சிகள், அமைப்புகள் இணைந்து ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி என்ற புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பித்துள்ளன. இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள ஆனந்தசங்கரி, ”இந்த அரசியல் கூட்டணிக்கு ஈபிடிபி, ஈரோஸ் உள்ளிட்ட 15 தமிழ் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமஸ்டிக் கோரிக்கைக்கும், நாட்டைப் பிரிப்பதற்கும் ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி எதிரானது. ஆனாலும் இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரானதல்ல. ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி சமஸ்டி முறையைக் கோராது. ஆனால், நாட்டில் உள்ள அனைவரும் சகோதரத்துவத்துடனும், சமமான உரிமைகளுடனும் வாழும் உரிமையைக் கோரும்.
தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் கட்சி தீர்வைக் காணும். போரினால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நிவாரணத்தைப் பெற்றுத் தரும். புனர்வாழ்வு அளிக்கப்பட்டவிடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதும், இந்தப் புதிய கூட்டணி அமைய மற்றொரு காரணம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.