பற்குணம் டி.ஆர்.ஓ (பகுதி 28)

திருகோணமலை பஸ் நிலையத்தில் அத்துமீறி மரக்கறி வியாபாரத்தை தொடங்கிய சிங்கள இன வியாபாரிகளை யாரும் வெளியேற்ற முயற்சிக்கவில்லை.அன்றைய பா.ஊ.நேமிநாதன் கூட மௌனமாகவே நின்றார்.ஊடகங்களில் மட்டும் செய்திகளாக வந்தன.அன்றைய நகர்ப்புற டி.ஆர்.ஓ ஆக சாம்பசிவ அய்யர் இருந்தார்.அவரிடம் பற்குணம் இது பற்றிக் கதைத்தார்.அவரும்,இ.போ.சபையும் தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.இதற்கு சாதகமான அரச அதிபர் பதவியில் இருந்தும் நடவடிக்கை யாரும் எடுக்க முன்வரவில்லை .இந்த தவறு பின்னாளில் இனவெறியர்களுக்கு பலம் கொடுத்தது.

இக்காலங்களில் நகர பொலிஸ் பத்தாம் வட்டார மக்கள் மீது கவனம் செலுத்தியது.ஆனால் அவர்கள் மீனவ தொழிலில் மட்டும் கவனம் செலுத்தியதால் மோதல்கள் நடக்கவில்லை . அந்த நாட்களில் கதிர்காம யாத்திரைகள் குச்சவெளி ஊடாகவே நடந்து போவார்கள்.இவரகள் கொக்குளாய் கடலேரி தாண்டி தென்னமரவாடி ஊடாக வருவார்கள்.இது பற்குணத்தின் நிர்வாக பகுதி என்பதால் இவர்களின் வசதிகளையும் கவனித்தார்.இவர்களை திருகோணமலை நகர இந்துக்களும் வந்து கவனிப்பார்கள்.பற்குணம் மதம் சார்ந்தவர் அல்ல.ஆனாலும் தனது நிர்வாக பிரதேசம் என்பதால் தனது கடமை என கருதினார்.

இவர்கள் குச்சவெளி பிள்ளையார் கோவிலுக்கு வந்தபோது அங்கே பற்குணம் போனார்.அங்கு திருகோணமலை நகரில் பத்தாம் நம்பரில் பிரபலமான புலேந்திரனும் வந்திருந்தார்.அவருக்கு எல்லோரும் பயம். ஆனால் இம்முறை புலேந்திரன் மிகவும் மரியாதையாக அங்கு பணியாற்றினார்.அங்குள்ள மக்கள் புலேந்திரன் டி.ஆர்.ஓ வை பார்த்து பொலிஸ் என நினைத்து அடங்கி நடக்கிறான் என கருதினர்.புலேந்திரன் பொலிஸுக்கும் பயப்படாதவர்.அவரின் நடத்தை பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

யாத்திரீகர்கள் இரண்டு நாள் தங்கி பின் கும்புறுப்பிட்டி புறப்பட்டனர்.அதன் பின் புலேந்திரன் எங்கள் வீட்டுக்கு வந்தார்.பற்குணம் அங்கு இல்லை.அம்மாவுக்கு வணக்கம் சொன்னார்.அம்மாவும் அவரை உட்கார வைக்க பற்குணமும் வந்தார்.புலேந்திரன் தன்னை அறிமுகப்படுத்தினார் .பற்குணத்துக்கு அவர் நகர்ப்புறத்தில் அடி தடிகளில் பிரபலமானவர் என்றே தெரியும்.அவர் யார் என தெரியாது.

புலேந்திரன் மட்டுவிலைச் சேர்ந்தவர்.எமது பெரிய அண்ணனுடன் படித்தவர்.அப்போது பற்குணத்தை தெரியும்.பற்குணத்தின் பெயரை ஞாபகம் வைத்தே அவரைத் தெரிந்து கொண்டு மரியாதையாக நடந்தார்.ஆனால் பற்குணம் மறந்துவிட்டார்.தனது அயலூரவர் தன் பாடசாலை சக மாணவன் என்பதாலேயே புலேந்திரன் அங்கு வந்து மிக மரியாதையாக செயற்பட்டார்.(இவர் இன்றைய நாடு கடந்த அரசின் உதவிபிரதமர் ராம் சிவலிங்கத்தின் உறவினர்).
புலேந்திரன் அடி தடிகளில் பிரபலமான போதும் அன்றைய நாட்களில் புதிதாக தோன்றிய இனவெறியாளர்களுக்கு மிகவும் சவாலாக நின்றவர் அவருக்கென்று ஒரு பெரிய குழுவை வைத்திருந்தார்..தனது பாடசாலை மாணவன் அயலூரவன் என்ற காரணத்தால் நகர்புறங்களில் பற்குணம் எங்கு நின்றாலும் மரியாதை காரணமாக அங்கிருந்து விலகிவிடுவார்.
அந்த மரியாதையை கடைசிவரை கொடுத்தார்

புலேந்திரனின் பண்பு சில படித்தவரகளிடம் இல்லாதது துரதிஷ்டமானது.

(விஜய் பாஸ்கரன்)
(தொடரும்….)