- மக்கள் ஆசிரியர் சங்கம்
மத்திய மாகாண தமிழ்ப் பாடசாலைகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாக அம்மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.எஸ். பிரேமவன்ச அவர்களுடன் 04.05.2016 அன்று மக்கள் ஆசிரியர் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், நிலவும் பிரச்சினைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக செயலாளர் உடன்பட்டுள்ளார். இக் கலந்துரையாடலின் போது மத்திய மாகாண தமிழ்க் கல்விப் பிரிவு பெயரளவில் இருக்கின்றமை, தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு தமிழ் மொழியில் சுற்றறிக்கைகள் வழங்கப்படாமை, தமிழ் மொழிப் பாடசாலைகளின் ஆசிரியர் இடமாற்றங்கள் இடமாற்றுச் சபையினூடாக இடம்பெறாமை, ஆசிரிய உதவியாளர்களின் கொடுப்பனவு முறையாக வழங்கப்படாமை மற்றும் விடுமுறை பற்றிய தெளிவீனம், உயர் தர மாணவர்களுக்கான குழு கருத்திட்டத்தில் மாணவர்கள் தவறாக வழி நடத்துகின்றமை போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா. நெல்சன் மோகன்ராஜ் குறிப்பிட்டார். குறித்த கலந்துரையாடலின் போது;
மத்திய மாகாண தமிழ்க் கல்விப் பிரிவை மேலும் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவும்; சுற்றிக்கைகள், கடிதங்கள் மற்றும் ஏனைய ஆவணங்களை தமிழ் மொழியிலும் அனுப்ப நடவடிக்கை எடுக்கவும்; தமிழ் மொழிமூல ஆசிரியர்கள் அதிபர்களுக்கான கூட்டங்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் என்பவற்றை முடிந்த வரையில் தமிழ் மொழியில் நடத்தவும், தவிர்க்க முடியாத நிலை ஏற்படும் பொது உரைபெயர்ப்பாளர்கள் வசதியைப் பெற்றுக் கொடுக்கவும்; தமிழ் மொழிமூல பாடசாலைகளின் ஆசிரியர்களின் இடமாற்றமும் இடமாற்றல் சபை ஊடாகவும் மேற்கொள்ளப்படுவதனை உறுதிசெய்யவும்; ஆசிரிய உதவியாளர்களின் கொடுப்பனவுகளை ஏனைய ஆசிரியர்களின் சம்பள திகதியிலேயே வழங்குமாறு மாகாணக் கல்வி திணைக்களத்தின் பணிப்பாளர் ஊடாக வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தவும், தாபனவிதிக் கோவையில் ஆசிரிய பயிலுநர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விடுமுறையை வழங்குவதற்கு வலயக் கல்வி பணிப்பாளர்களுக்கும் அதிபர்களுக்கும் அறிவிக்கவும்; உயர் தர மாணவர்களுக்கான குழு செயற்திட்டம் தொடர்பில் முழுமையான விளக்கத்தை அதிபர்களுக்கு வழங்கவும் செயலாளருடன் உடன்பாடு எட்டபட்டதாகவும் குறித்த உடன்பாடுகள் தொடர்பாக தான் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக மக்கள் ஆசிரியர் சங்கத்துக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கவும் உடன்பட்டதாக மேலும் குறிப்பிட்டார்.