தமிழ் ஈழ விடுதலை இயக்கத் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோளுக்கிணங்க நெல்லியடி பிரதேசத்திலுள்ள வறிய மாணவர்களுக்கான தனியார் வகுப்புகளுக்கான செலவை தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கொள்கைப்பரப்பு செயலாளரும் சிவன் அறக் கட்டளை நிறுவனத்தின் தலைவருமான கணேஸ் வேலாயுதம் ஏற்றுக்கொண்டார்.
அந்த மாணவர்கள் மாலை நேர கற்கைநெறியினை தொடர்வதற்கு ஏதுவாக தனியார் கல்வி நிலையத்தில் சேர்த்துவிடப்பட்டனர். தெரிவு செய்யப்பட்ட இவ் மாணவர்களுக்கு இப்பொழுது கற்கின்ற தரத்திலிருந்து தரம் 11 வரை கல்வி கற்பதற்கான கட்டணங்களை குறித்த கல்வி நிலையத்திற்கு செலுத்தப்படுகின்றது. அத்துடன் தங்கள் கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக பாடப்புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் அடங்கிய புத்தகப்பையும் வழங்கப்பட்டது.
இது குறித்த ஆரம்ப நிகழ்வில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கொள்கைப்பரப்பு செயலாளரும் சிவன் அறக் கட்டளை நிறுவனத்தின் தலைவருமான கணேஸ் வேலாயுதம், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் சர்வதேச இணைப்பாளர் கீரன் நகுலேந்திரன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் மாணவர்களை சந்தித்து தமது ஆசிகளை வழங்கினர்.
இந் நிகழ்வில் கணேஸ் வேலாயுதம் கூறுகையில், கடந்த மே தின நாளில் நாம் கல்வி தொடர்பான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்றேன். நாங்கள் வெறுமனே வாய்வார்த்தையில் நிற்காமல் செயல்வடிவம் கொடுத்திருக்கிறோம். இந்த ஆரம்ப செயற்றிட்டம் மேதின நிகழ்வு நடைபெற்ற நெல்லியடி பிரதேசத்தில் ஆரம்பித்திருக்கிறது. இந்த செயற்பாடுகள் வடக்கு மாகாணம் மற்றும் இலங்கை முழுவதிலும் விஸ்தரிக்கப்படும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன். மாணவர்கள் கல்விகற்பதென்பது கட்டாயமானது. அதனை செய்வதற்கு வறுமை ஒரு காரணமாக இருக்கக்கூடாது என நினைத்தோம். அதனால்தான் உங்கள் அனைவரின் கல்விக்காக நாம் கைகொடுக்கிறோம். இதனை நீங்கள் முழுமையாக பயன்படுத்தி தொடர்ந்து கற்கவேண்டும் என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தெரிவிக்கையில், மாணவர்களாகிய நீங்கள் எல்லோரும் படித்தால் மட்டுமே உங்கள் பெற்றோரும் ஆசிரியர்களும் மகிழ்வார்கள். பெருமைப்படுவார்கள். ஆனால், உங்களுக்கு இப்போது கல்வி கற்பதென்றால் கசப்பானதொன்றாக இருக்கலாம். இந்தக் கசப்பான அனுபவம்தான் பின்நாளில் உங்களை மகிழ்விக்கப்போகிறது. ஆதலால் தொடர்ந்து படித்து முன்னேற வேண்டும் உங்களின் முன்னேற்றத்திற்காக நாம் தொடர்ந்து பாடுபடுவோம் என்றார்.