குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.