ஈழத் தமிழர்களாகிய நாங்கள் பெரும் இன அழிப்பை சந்தித்து, தொடர்ந்தும் அடக்குமுறைக்கு ஆளாகிக் கொண்டிருக்கின்றோம். அரசியல் ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் அடுத்த கட்டப் போராட்டத்தை நடத்துவதற்கு ஆயிரம் குழப்பங்களுக்கு மத்தியில் முயன்று வருகின்றோம். இதில் ஆயிரத்தி ஓராவது குழப்பமாக எமது அரசியலுக்குள் சீமானின் தலையீடு அமைகின்றது. கையறு நிலையில் நிற்கும் எமது மக்களிடம் அடுத்த தலைவராக சீமான் வலிந்து முன்னிறுத்தப்படுகிறார். புலம்பெயர் நாடுகளில் ‘நாம் தமிழர்’ கிளைகள் திறக்கப்படுகின்றன.
இந்தியக் குடிமகன்கள் மட்டுமே ‘நாம் தமிழர்’ கட்சி உறுப்பினராகலாம் என்று அவர்களின் ஆவணத்தில் குறிக்கப்பட்டிருந்தாலும், ஈழத் தமிழர்களிடம் பணம் பெறும் பொருட்டு, அவர்களிடமும் உறுப்பினர் படிவம் வழங்கப்படுகிறது.
ஐரோப்பாவில் இருந்து பல கோடிகள் ஈழத் தமிழர்களுடைய பணம் இதுவரை சீமானுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. உண்மையில் இவைகள் அல்லலுறும் போராளிகளுக்கும், மக்களுக்கும் சென்றிருக்க வேண்டிய பணம்.
ஈழத்தில் போராளிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நோய்களை குணமாக்க பணம் இன்றி செத்து மடிகிறார்கள். வக்கீலுக்கு கட்ட பணம் இன்றி சிறையில் வாடுகிறார்கள். சொல்ல முடியாக துன்பத்தில் மக்கள் வாழ்கின்றார்கள்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அங்கே வாழும் மக்களை முதலமைச்சராக முடியாது என்று சொல்கின்ற சீமான், தனது பக்கத்து நாட்டு மக்களின் தலைவராக முயன்று வருகின்றார்.
தமிழகத்தில் சீமானுக்கு விழுகின்ற ஒவ்வொரு வாக்கும், எமது மக்களை மேலும் முட்டாள்கள் ஆக்கும். அந்த வாக்குகளை கணக்குக் காட்டி, அதற்கு ஒரு வியாக்கியானம் சொல்லப்பட்டு, தொடர்ந்தும் எமது மக்களிடம் பணம் சேர்க்கப்படும்.
மேலும் பல கிளைகள் திறக்கப்பட்டு, புலம்பெயர் நாடுகளில் குழப்பங்கள் உருவாக்கப்படும்.
எமது மக்கள் தெளிவான அரசியல் பாதையில் பயணிக்க வேண்டும். பனியிலும், குளிரிலும் ஈழத் தமிழர்கள் உழைக்கின்ற பணம் அவர்களின் தாயகம் நோக்கி திருப்பப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் சிலர் சொகுசாக வாழ்வதற்கு பயன்படுத்தப்படக் கூடாது.
தமிழக மக்கள் தருகின்ற தெளிவான முடிவு, ஈழத் தமிழர்களின் சிந்திக்கும் திறனை வளர்த்து, தமது சொந்தக் காலில் நின்று போராடுகின்ற அறிவைக் கொடுப்பதாக இருக்க வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.
(வி. சபேசன்)