அகதி வாழ்வு

(சாகரன்)
அகதி……… இன்றைய நவீன உலகத்தின் புதிய பிரச்சனை. ஆதி மனிதன் வறுமை, வறட்சி, வளம் இன்மை காரணமாக இடம் விட்டு இடம் பெயர்ந்து தமது வாழ்வை உறுதிப்படுத்தினான். அன்றெல்லாம் நாடுகள் என்ற எல்லைகள் இருக்கவில்லை. எனவே வாழ்வைத் தேடி தடையின்றி? நகரக் கூடியதாக இருந்தது. இன்று நாடுகள், தேசங்கள் என்று எல்லை வகுத்திருப்பதினால் இலகுவில் இடம் பெயர முடியவில்லை. அகதி வாழ்விற்கு பல காரணங்கள் இருந்தாலும் போர்… யுத்தம் என்பனவே முதன்மைக் காரணிகளாக அமைகின்றன. மக்கள் பாதுகாப்பைத் தேடி இடம் பெயர்ந்து அகதியாகும் போது பாதுகாப்பிற்கு சம அளவில் தமது பொருளாதார நிலைப்படுத்தலைக் கவனித்தில் கொள்கின்றனர். நாடுகளும் தமக்கு குறைந்த கூலியில் ‘பிரச்சனைகள் அற்ற” மனித வளம் தேவைப்படுவதைக் கருத்தில்; கொண்டே அகதிகளை எற்கின்றனர். ஆனால் நாடுகள் மனிதாபிமானம், உதவுதல் போன்ற கோஷங்களையே முன்னிலையில் வைக்கின்றனர் இலங்கைத் தமிழரான நாங்களும் எமது மொழி, காலச்சாரம், பழக்க வழக்கம் போன்றவற்றுடன் ஒத்திசையும் தமிழ் நாட்டிற்கு அகதிகளாக இடம் பெயருவதை விட மேற்கத்திய நாடுகளுக்கு பொருளாதார உறுதிப்பாட்டை சீர்தூக்கிப் பார்த்து அகதிகளாக இடம்பெயர விரும்புகின்றனர். இல்லாவிடின் நாம் இந்தியாவின் தமிழ் நாட்டிற்கே அதிகம் இடம்பெயர்ந்து இருந்திருப்போம். இதுவே இன்று சிரியா போன்ற நாட்டிலும் நடைபெறுகின்றது. போர்கள் நிறுத்தப்படாத வரைக்கும் அகதிகள் உருவாதல் நிறுதப்பட முடியாது. குறைந்த கூலியில் மனித வளம் தேவைப்படும் வரை யுத்தங்களும், அகதிகள் பிரச்சனைகளையும் முதலாளித்துவ நாடுகள் தக்க வைத்துக்கொண்டே இருக்கும்