கம்யூனிச கியூபாவும், மதம் குறித்த கட்டுக்கதையும்
காலங்காலமாக ஒரு கட்டுக்கதை மக்களின் மனதில் திணிக்கப்பட்டுள்ளது. “கம்யூனிஸ்ட் நாட்டில் மதச் சுதந்திரம் கிடையாது”, என்று இறை நம்பிக்கையுள்ள மக்களுக்கு பூச்சாண்டி காட்டுவது வழமை. இவ்வருடமும் “கியூபாவில் மனிதஉரிமைகள்” பற்றிய அமெரிக்க அறிக்கையில், அங்கே மதச்சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதற்கு இந்த அறிக்கை கூறும் காரணங்கள் என்ன என்று பார்ப்போம்.
1. தனியார் மதப் பாடசாலைகளை அமைக்க தடை.
2. எந்த ஒரு மத நிறுவனமும் நீதி அமைச்சில் பதிவு செய்யப்பட வேண்டும்.
3. சமய முறைப்படியான திருமணத்திற்கு முன்னர் பதிவுத் திருமணம் செய்திருக்க வேண்டும்.
கியூபாவின் கிறிஸ்தவ பாதிரிமார் இந்த அறிக்கையில் இருப்பதை, “கியூபாவில் உண்மைநிலையை அறியாது, தவறான தகவல்களை வைத்து” எழுதப்பட்டுள்ளதாக நிராகரித்துள்ளனர். அவர்கள் கூறுவதன் படி, மத நிறுவனங்களை நீதி அமைச்சில் செய்யப்பட வேண்டும் என்ற சட்டம் எதுவும் இல்லை. மேலும் தாங்களே திருமணம் முடிக்க காத்திருக்கும் சோடிகளை சட்டப்படி பதிவுத்திருமணமும் செய்துகொள்ளுமாறு அறிவுறுத்துவதாகவும், இருப்பினும் சில பாமரர்கள் (நமது நாடுகளில் உள்ளது போல) சமயத்திருமணங்களை மட்டும் செய்து கொண்டு வாழ்வதாகவும் தெரிவித்தனர். அவர்கள் மேலும் குறிப்பிடும் போது, அமெரிக்காவில் நடைபெறும் கிறிஸ்தவ மகாநாடுகளுக்கு செல்ல, தமக்கு அமெரிக்க விசா வழங்கப்படுவதில்லை என்றும் குறை கூறினர்.
கியூபாவின் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் Cuban Council of Churches (CIC) என்ற அமைப்பு, அமெரிக்காவின் இந்த மனித உரிமைகள் சம்பந்தமான அறிக்கை, தவறான தகவல்களை அடிப்படையாக கொண்டிருப்பதாக கூறியுள்ளது. கியூபாவில் இதுவரை யாருமே மத வழிபாடு செய்வதில் இருந்து தடுக்கப்படவில்லை என்றும், மதகுருக்கள் தமது கடமையை செய்வதற்கு எந்த தடையுமில்லை என்றும் தெரிவித்தனர். இந்த அமைப்பின் பாதிரிமார் தலைநகர் ஹவானாவில் கூடி, கியூபாவின் நிலையை உண்மைக்கு மாறாக திரித்து கூறும் அமெரிக்க அறிக்கைக்கு எதிராக, மறுப்பறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். “நேர்மையான” சர்வதேச ஊடகங்களோ கியூபா அறிக்கையை இருட்டடிப்பு செய்து விட்டு, அமெரிக்க அறிக்கையை மட்டும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவார்கள், என்பதை நாம் எதிர்பார்க்கலாம்.
கியூபாவில் கிறிஸ்தவ சமயத்தவர்கள் மட்டும் வாழவில்லை. ஆப்பிரிக்க வம்சாவளியினர் தமது மூதாதையரின் சமயத்தை இப்போதும் பின்பற்றுகின்றனர். Yoruba Cultural Association, Soka Gakkai Association என்பன அவர்களது மத நிறுவனங்கள். இவர்களை விட சிறிய அளவில் யூதர்களும், முஸ்லிம்களும் வாழ்கின்றனர். அவர்களும் பூரண சுதந்திரத்துடன் தமது மதங்களை பேணி வருகின்றனர். மேற்குறிப்பிட்ட கிறிஸ்தவர்களல்லாத மதங்களின் பிரதிநிதிகள் கூட அமெரிக்க அறிக்கையை கண்டித்துள்ளனர்.
மதச் சார்பற்ற கியூபா அரசியல் அமைப்பு சட்டமானது, “அனைத்து மதங்களும் சட்டத்திற்கு முன்னாள் சமம்”, என்று கூறுகின்றது. “ஒவ்வொரு பிரசையும் தனக்கு பிடித்த மதத்தை பின்பற்றவோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மதங்களை பின்பற்றவோ, அல்லது ஒன்றிலிருந்து வேறொரு மதத்திற்கு மாறவோ, அல்லது எந்த மதத்திலும் சேராமல் இருக்கவோ உரிமை உள்ளது.”- இவ்வாறு குறிப்பிடும் எட்டாம் இலக்க சட்டம், அரசும், மதங்களும் வேறுவேறாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் வலியுறுத்துகின்றது.
நீண்ட காலமாகவே பிற லத்தீன் அமெரிக்க நாடுகளில், “விடுதலை இறையியல்” என்ற கொள்கை அடிப்படையில், மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடிய கத்தோலிக்க பாதிரிமாருக்கு கியூபா அடைக்கலம் கொடுத்து வந்தது. பாராளுமன்றத்திற்கு சிலவேளை கிறிஸ்தவ பாதிரிமாரும் சுயேச்சையாக தெரிவு செய்யப்படுவதுண்டு. கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கத்துவராக சேருபவர்களுக்கு மட்டுமே, எந்த மதத்தையும் சேர்ந்திருக்க கூட்டாது என்ற கட்டுப்பாடு உண்டு. ஆனால் அந்த கட்டுபாடு கட்சி அரசியலில் ஈடுபடாத சாதாரண மக்களுக்கு கிடையாது.
கியூபா புரட்சிக்கு பின்னர் ஒருபோதும் எந்த தேவாலயமும் பூட்டப்படவில்லை. மாறாக மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது காரணமாக, பலர் தாமாகவே (விசேட தினங்கள் தவிர்ந்த பிற நாட்களில்) தேவாலயம் போவதை நிறுத்திக்கொண்டனர். மக்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும், வாழ்க்கை கஷ்டங்களில் இருந்து விமோசனம் இல்லாத நேரம் தான் ஆலயம் செல்வது வழமை. நவீன உலகின் மேற்கத்திய-நாகரீக மோகம் காரணமாக பல இளைஞர்கள் தேவாலயங்களுக்கு போவதில்லை. அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் இளம்சமுதாயம் மத்தியில் மதநம்பிக்கை குறைவாக உள்ளது. அங்கெல்லாம் வழிபாட்டாளர்கள் வருவது பெருமளவு குறைந்து விட்டதால், பல தேவாலயங்களை கவனிப்பார் அற்று வெறுமையாக இருக்கின்றன. இதுவே கியூபாவில் அல்லது பிறிதொரு கம்யூனிச நாட்டில் நடந்தால் மட்டும், “மத சுதந்திரம் இல்லை”, “மனித உரிமை இல்லை” என்று பிரச்சாரம் அவிழ்த்துவிடப்படும்.