இந்திய மேலாதிக்க அதிகாரத்தினதும், அமெரிக்க ஏகாதிபத்திய அணியினதும் அடிமை நாடாக முழுமையான மாற்றத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள இலங்கையில், மக்கள் மத்தியில் கலாசார ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஏற்கனவே நுகர்வுக் கலாசார வெறி போருக்குப் பின்னான சூழலில் மக்களை ஆக்கிரமித்துக்கொள்ள, இந்திய அரசு தனது கலாச்சார ஆக்கிரமிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.
தென்னிந்திய தொலைக்காட்சித் தொடர்களும், சினிமாக் குப்பைகளும் ஆக்கிரமித்துள்ள போர்தின்ற வடக்குக் கிழக்கில் சினிமாக் கூத்தாடிகள் நேரடியாகத் தோன்ற ஆரம்பித்துள்ளனர். அதன் மற்றொரு பகுதியாக கோலிப் பண்டிகை என்ற இந்தியப் பண்டிகையை யாழ்ப்பாணத்தில் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் கலாசார அடிப்படைகளுடன் குறைந்தபட்சத் தொடர்புமற்ற இந்தப் பண்டிகையை யாழ்ப்பாணத்தில் இயங்கும் இந்தியத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.
விடுதலைப் புலிகளின் போராளிகள் மரணித்த நாளைக் நினைவுகூரும் மாவீரர் தினத்தில் இப் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாட இந்தியத் துணைத் தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது. இப் பண்டிகையைக் கொண்டாடுவதற்கான இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான பற்றுச்சீட்டுக்களும் விற்பனை செய்யப்படுகின்றன. கண்டியில் இந்தியத் துணைத் தூதரகம் பல வருடங்களாக இயங்கிவருகின்ற போதும் இதுவரை இப் பண்டிகையைக் கொண்டாடுவதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
யாழ்ப்பாணத்தில் பெரும் கலாசார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முகவர் போன்றே அங்கிருக்கும் இந்தியத் துணைத் தூதரகம் செயற்பட்டுவருகின்றது. ஜப்பானிய ஆதிக்கத்திலிருந்த தென்கொரியாவின் தேசியவாத அலையை முறியடிப்பதற்காக அமெரிக்க அரசால் 1945 இலிருந்து திட்டமிட்டுத் தோற்றுவிக்கப்பட்ட கலாசார மாற்றம் இன்றைய தென்கொரியாவை அமெரிக்க அடிமை நாடாக மாற்றியுள்ளது. பௌத்தமும் பழங்குடி மதங்களும் மட்டுமே பெரும்பான்மையாகவிருந்த தென்கொரியாவில் இன்று கிறீஸ்தவ மதப் பிரிவுகளே பெரும்பான்மை.
தென்கொரியா போன்ற மாற்றம் ஒன்றை இந்திய அரசு வடக்கில் திட்டமிவது தெளிவாகின்றது. கடந்த கால பாடங்களிலிருத்து வடக்கிலிருந்து முற்போக்குத் தேசியவாதம் தோன்றுவதற்கான சூழலை அறிந்துகொண்ட இந்திய அதிகாரவர்க்கம் தனது கலாசார ஆக்கிரமிப்பைத் திட்டமிட்டு வளர்க்க ஆரம்பித்துள்ளது. கடந்தவாரம் தென்னிந்தியாவில் பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், ‘பாரதமாதாவை’ ஈழத்திற்கு வருமாறு வருந்தியழைத்தார். அவர் நாடு திரும்புவதற்கு முன்னரே இந்தியக் கலாசார நிகழ்விற்கு அவரது காலடியில் திகதி குறிக்கப்பட்டுவிட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற ‘தேசிய’த்தை அடைமொழிகாக்கொண்ட விதேசியக் கட்சிகளோ, விக்னேஸ்வரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்ற ‘தேசிய’ப் பிழைப்புவாதிகளோ இந்திய அரசின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகக் குரலெழுப்ப மாட்டார்கள் என்பதில் துளியளவும் சந்தேகமின்றி நம்பிக்கைகொள்ளலாம்!
(இனியொரு.கொம் 07-11-2016)