ரொரன்ரோ கனடாவில் நவம்பர் 13ம் திகதி ‘தாங்கொணாத் துன்பம்’ என்றும் நூல் வெளியிடப்பட்டது. ஈழவிடுதலை அமைப்புக்களில் ஒன்றான தமிழீழத் தேசிய விடுதலை முன்னணி(NLFT), தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி(PLFT) போன்ற அமைப்புக்களின் முன்னணி போராளி அன்ரனின் நினைவுகளை உள்ளடக்கியதாக இந்தப் புக்தகம் தொகுக்கப்பட்டிருந்தது. இதே அமைபின் போராளியான ஜீவாகரன் சதாசிவம் என்பவரினால் தொகுக்கப்பட்ட புத்தகம் ஏலவே ஈழத்தில் யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் வெளியிடப்பட்டு விமர்சனக் கூட்டமும் நடைபெற்று இருந்தன. இதனைத் தொடர்ந்து கனடாவில் இதே நிகழ்வு நடாத்தப்பட்டது.
பல்வேறு தரப்பு மக்களும் கலந்து கொண்ட இந்த நிகழ்வை டேவிட்சன் தலமை தாங்கி நடாத்தினார். வரவேற்புரையை இளம் தலைமுறையின் பிரநிதியாக அடையாளம் காணப்படும் அளவிற்கு சிறப்பாக காவியா யோகநாதன் நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து மனித குல விடிவிற்காக தம்மை அர்பணித்த யாவருக்கும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து புத்தக வெளியீடு நிகழ்வு நடைபெற்றது. இதனை புலிகளின் வதைமுகாமில் வதைகளுக்கு உள்ளாகி உயிர் தப்பிவந்த அருள்பேட் புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட வசந்தா சிறீதரன் பெற்றுக்கொண்டார். இதனைத் தொடரந்து புத்தக மதிப்பீட்டுரை நடைபெற்றது.
முதலில் ஜேம்ஸ் அவர்கள் நிகழ்தினார். அவர் தனது உரையில் இப்புத்தகம் ஒரு முழுமையான, கனதியான புத்தகம் என்பதையும் ‘தூக்கு மேடைக்குறிப்பு’ என்ற யூலிஸ் பூசிக் எழுதிய புத்தகத்திற்கு ஒத்த தன்மை இருப்பதை தன்னால் உணர முடிந்தது என்பதை குறிப்பிட்டார். கூடவே அன்ரன், சாந்தி இருவரும் யூலிஸ் பூசிக், அகுஸ்தினா பூசிக் போன்றதொரு அவல நிலையில் புலிகளின் வதை முகாமில் அன்ரன் கைதியாக இருந்த போது வாழ்ந்தார்கள் என்று தெரிவித்தார். மேலும் நாஜிகளின் முகாங்களில் யூலிஸ் பூசிக் தனது எழுத்துக் குறிப்புக்களை எழுதவும், இதனை வெளியே அனுப்பவும் இருந்த சிறிய மனிதாபிமான வாய்ப்புக்கள் கூட புலிகளின் வதை முகாமில் இருக்கவில்லை என்று கருத்துரைத்தார். எமது சமூகத்திலிருந்து உருவான இந்த பாசிச அமைப்பின் செயற்பாடடிற்காக இந்த சமூகத்தின் அங்கத்தவன் என்ற வரையில் தானும் வெட்கித் தலைகுனிவதாக தெரிவித்தார். நடந்து முடிந்த யுத்தம் மரணத்தை நேசிக்கும் ஒரு பிரிவு மனநோயாளி மக்களை விட்டுச் சென்றிருக்கின்றது என்று தனது வருத்தங்களைத் தெரிவித்தார்.
இவரைத் தொடரந்து கருத்துரை வழங்கிய சுல்பிகா இஸ்மெயில் இந்தக் கைதுகளும் இதனையொட்டி சம்பவங்களும் ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள் பற்றி கருத்துரைத்தார். ஐ.நா. சபைகளின் மனித உரிமைப் பிரிவுகளின் மனித உரிமை மீறல்களை பற்றி கேள்விகளை சமாதான காலத்தில் புலிகள் எவ்வாறு தமக்கு சாதமாக பாவிக்க முற்பட்டனர் என்பதை அந்தக்கால கட்டங்களில் மனித உரிமை அமைப்புக்களுடன் இணைந்து வேலை செய்தபோது தான் அவதானித்துக் கொண்டதாகவும் குறிப்பிட்டார். சாந்தியின் மன உழைசலுடனான அன்ரனின் கைது காலத்து செயற்பாடுகள் எமது சமூகத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களைப் படம் பிடித்துக்காட்டுவதாக கருத்துரைத்தார்.
தொடர்ந்து பேசிய விஜி போர் காலங்களில் மட்டக்களப்பு பிரதேசங்களில் கொலையுண்டு வீதியில் வீசப்பட்ட மாற்றுக் கருத்தாளர்களின சாவீட்டிற்கு கூட மக்கள் செல்வதை பயத்தின் காரணமாக தவிர்த்ததையும் தாங்கள் இந்த அச்சுறுத்தல்களையும் மீறி இந்த சாவீடுகளில் கலந்துகொண்டதையும் நினைவு கூர்ந்தார்.
இறுதியாக துரைராஜ பாஸ்கரன் தனது உரையில் விடுதலைப் புலிகளின் குற்றங்களை ஆரம்பித்தில் எதிர்க்க முற்பட்ட சமூகம் படிப்படியாக இந்த குற்றங்களை நியாயப்படும் அளவிற்கு தன்னை பழகப்படுத்திக் கொண்டது இதனை மாற்று விடுதலை அமைப்பு போராளிகளை கொன்று தெருவில் டயர் போட்டுக் கொழுத்திய போது சோடா உடைத்து வரவேற்ற மக்கள் கூட்டத்தில் இந்த மோசமான மனமாற்றத்தை கண்டு கொண்டதாகவும் குறிப்பிட்டார். எமது சமூகம் பிழைகளை ஏற்றுக் கொள்ளும் அளவு கோலில் இன்னமும் பூச்சியத்திற்கு குறைந்த அளவு நிலையில் இருப்பதாக குறிப்பிட்டார். இந்த அளவு கோல் மக்கள் இன்னமும் பிழைகளை ஏற்றுக் கொள்ளும் மனநிலையிலிருந்து பார்க்கும் இழிநிலையில் இருப்பதை எடுத்துக்காட்டுவதாகவும், இது நாகரீகம் அடைந்த சமூகம் ஒன்றின் சராசரி நிலையை விட மிகவும் தாழ்ந்த நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஏற்புரையை வழங்கிய ஜீவாகரன் சதாசிவம் இந்தப் புத்தகத்தை தொகுத்து வெளியிடுவதன் நோக்கம் தனது சகோதரியின், மைத்துனரின் அவலங்களை எடுத்தியம்புதன் மூலம் புலிகளின் பாசிச செயற்பாட்டு உண்மை நிலைய அம்பலப்படுத்துதோடு இதுபோன்ற பாசிச செயற்பாடுகளை இனிமேலும் நடைபெறாமல் தடுப்பதே என்று கூறினார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட யாவருக்கும் நன்றியுரையும் வழங்கினார். இறுதியாக சபையில் இருந்தோரின் கருத்துரைகளுடன் கூட்டம் நிறைவுடன் நிறைவுபெற்றது.
(மேலும் விபரங்கள் தொடரும்…)
(சாகரன்)