(என்.ராமதுரை)
உயிரினம் என்பது நுண்ணுயிர் வடிவில் மொத்தப் பிரபஞ்சத்திலும் பரவி நிற்கின்ற ஒன்று சூரிய மண்டலத்துக்கு அப்பால் அண்டவெளியில் பூமி மாதிரியில் கோடானுகோடி கிரகங்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஆனால், அவற்றில் நம்மைப் போன்ற மனிதர்கள் இருக்கிறார்களா? இதைக் கண்டறிய விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளாகப் பல வழிகளிலும் முயன்றுவருகின்றனர்.
பூமியில் உகந்த சூழ்நிலையில் 350 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உயிரினம் தோன்றியது. ஆரம்பத்தில் நுண்ணுயிர்களே இருந்தன. பின்னர், பரிணாம வளர்ச்சி மூலம் வெவ்வேறான உயிரினங்கள் உண்டாயின என்று பொதுவில் ஒரு கருத்து நிலவுகிறது. இதையே வேறுவிதமாகச் சொல்வதானால், பூமியில் உள்ள உயிரினம் அனைத்தும் பூமியில் இருந்த சூழ்நிலைகளால் தோன்றியவை எனலாம். ஆனாலும், இதற்கு மாற்றாக ஒரு கருத்தும் கூறப்பட்டுவருகிறது. ‘உயிரினம் என்பது நுண்ணுயிர் வடிவில் மொத்தப் பிரபஞ்சத்திலும் பரவி நிற்கின்ற ஒன்று’என்று அது கூறுகிறது. அண்டவெளி வழியே நுண்ணுயிர்கள் ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்குப் பரவலாம் என்பது அக்கொள்கையின் கருத்தாகும்.
உயிர் அழிக்கும் கதிர்கள்
ஆனால், விஞ்ஞானிகள் அறிவியல்ரீதியில் இக்கொள்கையை ஆராய முற்பட்டபோது, அது சாத்தியமானதுதானா எனப் பல ஐயப்பாடுகள் எழுந்தன. உள்ளபடி, அண்டவெளி என்பது ஆபத்து நிறைந்தது. சூரியனிலிருந்தும் மற்ற நட்சத்திரங்களிலிருந்தும் ஓயாது எக்ஸ் கதிர்கள் உட்பட மிக ஆபத்தான வேறு பல கதிர்களும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இக்கதிர்கள் உயிரினத்தை அழிப்பவை. நுண்ணுயிர்களை அழிக்க எக்ஸ் கதிர்கள்கூடத் தேவையில்லை, புற ஊதாக் கதிர்கள் ஒன்றே போதும்.
எனினும், அபூர்வமாகச் சில வகை நுண்ணுயிர்கள், இந்த ஆபத்தான கதிர்களையும் தாங்கி நிற்க வல்லவை. எனவே, விஞ்ஞானிகள் பலவகையான நுண்ணுயிர்களை விண்வெளிக்குக் கொண்டுசென்று, இவை எந்த அளவுக்கு விண்வெளி நிலைமைகளைச் சமாளித்து நிற்கின்றன என்று ஆராய்வதில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாகவே இவ்விதப் பரிசோதனைகள் நடந்துவருகின்றன.
விண்வெளித் தூசுகள்
நுண்ணுயிர்கள் எங்கிருந்தோ வருவதாக வைத்துக்கொண்டாலும், அவை விண்வெளியில் மிதந்து வர முடியாது. விண்வெளியில் காற்று கிடையாது. ஆனால், விண்கற்கள், வால் நட்சத்திரங்கள் ஆகியவற்றின் மூலம் இவை வர இயலும். சிறிய விண்கற்கள் ஓயாது பூமியில் வந்து விழுந்த வண்ணம் உள்ளன. இவை பூமியில் காற்று மண்டலம் வழியே பல ஆயிரம் கி.மீ. வேகத்தில் கீழ் நோக்கி இறங்கும்போது தீப்பிடிக்கின்றன. அப்போது அவற்றில் பலவும் அழிந்துவிடுகின்றன. அவற்றில் அடங்கிய நுண்ணுயிர்கள் தப்பிப் பிழைக்க வாய்ப்பு குறைவு.
இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். விண்வெளி என்பது மிக சுத்தமான பிராந்தியம் அல்ல. விண்வெளித் தூசு நிறையவே மண்டிக் கிடக்கிறது. வால் நட்சத்திரங்கள் ஒவ்வொரு முறையும் வரும்போதும் அவற்றிலிருந்து பல கோடி டன் அளவுக்கு நுண்ணிய துணுக்குகள் வெளிப்படுகின்றன. விண்கற்களிலிருந்தும் இப்படி வெளிப்படுவது உண்டு. இவ்விதமாக விண்வெளியில் துகள் கூட்டங்கள் நிறையவே உள்ளன.
விண்வெளித் துகளும் ப்ளூ ஜுரமும்
சூரியனைச் சுற்றி வருகின்ற பூமியானது, தனது பாதையில் இந்தத் துகள் கூட்டங்களின் ஊடே செல்வது உண்டு. அப்போது எண்ணற்ற துகள்கள் பூமியில் வந்து விழுகின்றன. இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி பிரெட் ஹாயில், இலங்கையைச் சேர்ந்த சந்திரா விக்கிரமசிங்கே ஆகிய இருவரும் இத்துகள்கள் பற்றி விரிவாகவே ஆராய்ந்தவர்கள்.
இத்துகள்கள் மூலம் நுண்ணுயிர்கள் பூமிக்கு வந்து சேர்வதாக இருவரும் கூறினர். அவர்கள் இத்துடன் நிற்கவில்லை. இத்துகள்கள் மூலம் விண்வெளியிலிருந்து கிருமிகளும் பூமிக்கு வந்து சேர்வதாக அவர்கள் கூறினர். உலகில் அவ்வப்போது ஒரே சமயத்தில் ஆங்காங்கு ப்ளூ ஜுரம் தோன்றுவதற்கு இந்தக் கிருமிகளே காரணம் என்றும் அவர்கள் கூறினர். வேறு நோய்களும் இப்படித் தலையெடுப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். ஆனால், அவர்களின் இக்கருத்தை மற்ற விஞ்ஞானிகள் நிராகரித்தனர்.
அஸ்டிராய்டுகளும் பூமியும்
விண்கற்கள், வால் நட்சத்திரங்கள் ஆகியவற்றில் கிருமிகள் இருக்கின்றனவோ இல்லையோ அவற்றில் நிச்சயம் உயிரினத் தோற்றத்துக்கு உதவக்கூடிய பல்வேறு அடிப்படைப் பொருட்கள் உள்ளன. பூமியில் காணப்படுகின்ற விதவிதமான வேதியல் மூலக்கூறுகளில் பலவும் விண்கற்களில் காணப்படுகின்றன. இது அறிவியல்பூர்வ மாகக் கண்டறியப்பட்ட உண்மை.
நாம் இதுவரை பொதுவில் விண்கற்கள் என்று கூறிவந்தோம். வடிவில் பெரிய விண்கற்களை அஸ்டிராய்ட் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர் சூரிய மண்டலத்தில் கோடானு கோடி அஸ்டிராய்டுகள் உள்ளன. தனிப்பாதை வகுத்துக்கொண்டு சூரியனைச் சுற்றுகின்ற அஸ்டிராய்டுகள் உண்டு. பூமியை எட்டிப் பார்த்துவிட்டுச் செல்கின்ற அஸ்டிராய்டுகளும் உண்டு. என்றாவது பூமியில் மோதிவிடலாம் என்று சொல்லக்கூடிய அளவிலான அஸ்டிராய்டுகள் நிறையவே உள்ளன.
அஸ்டிராய்டை நோக்கி ஆய்வுக்கலம்
இந்த அஸ்டிராய்டுகள் சூரிய மண்டலம் தோன்றியபோதே உண்டானவை. பூமி தோன்றிய பின்னர் பூமியில் எவ்வளவோ மாறுதல்கள் ஏற்பட்டுவிட்டன. ஆனால், அஸ்டிராய்டுகளில் உள்ள பொருட்கள் ஆதியிலிருந்து அப்படியே உள்ளன என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எனவே, அஸ்டிராய்ட் ஒன்றில் அடங்கிய பொருட்களை ஆராய்ந்தால் பூமியின் தோற்றம் பற்றியும் பூமியில் உயிரினம் தோன்றியது பற்றியும் நிறைய அறிந்துகொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அந்த நோக்கில் அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும் அஸ்டிராய்டுகளை நோக்கி ஆய்வுக் கலங்கள் பலவற்றை அனுப்பியுள்ளன. ஜப்பானும் இத்தகைய விண்கலம் ஒன்றை அனுப்பியது.
ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு 2004-ம் ஆண்டில் அனுப்பிய ரோசட்டா விண்கலத்திலிருந்து சிறிய ஆய்வுக் கலம், வால் நட்சத்திரம் ஒன்றில் இறங்கி விரிவாக ஆராய்வதாக இருந்தது. ஆனால், அந்த சிறிய ஆய்வுக் கலம் சரியாக செயல்படாமல் போனதால் ஏமாற்றம்தான் மிஞ்சியது. ரோசட்டாவின் திட்டம் ஈடேறியிருந்தாலும்கூட அது வால் நட்சத்திரம் அல்லது அஸ்டிராய்ட் ஒன்றில் அடங்கிய பொருளை பூமிக்கு எடுத்து வந்து ஆராய்ச்சிக்கூடங்களில் வைத்து ஆராய்வதற்கு ஈடாகாது.
இதன் பின்னணியில் அமெரிக்காவின் நாஸா அமைப்பு பென்னு என்னும் பெயர் கொண்ட அஸ்டிராய்டை நோக்கி இந்த செப்டம்பர் மாதம் ஒரு விண்கலத்தை அனுப்பியுள்ளது. இந்த விண்கலம் அந்த அஸ்டிராய்டை 2018-ல் அடைந்து, அங்கிருந்து சுமார் 60 கிராம் கல்லையும் மண்ணையும் அள்ளிக்கொண்டு 2023-ல் பூமிக்குத் திரும்பும். அந்தக் கல்லையும் மண்ணையும் ஆராய்ந்தால் பூமியின் தோற்றம் பற்றியும் பூமியில் உயிரினம் தோன்றியதில் அஸ்டிராய்டுகளுக்குப் பங்கு உண்டா என்பது பற்றியும் பல தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்கலம் திரும்பும் வரை காத்திருப்போம்!
(The Hindu)