கடந்த ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி தோட்டக் கம்பனிகள் சார்பில் இலங்கை முதலாளிமார் சம்மேளனமும் தோட்ட தொழிலாளர்களின் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டு நிலையம் என்பனவும் கைச்சாத்திட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள கூட்டு ஒப்பந்தத்தை தொழில் ஆணையாளர் கடந்த நவம்பர் மாதம் 10ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்தமை பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பான கூட்டு ஒப்பந்த தொழிற்சட்டங்களுக்கு முரணாகவும், தொழிலாளர்கள் ஏற்கனவே அனுபவித்து வந்த உரிமைகளை பறிப்பதாகவும், இயற்கை நீதிக்கு எதிராகவும், 2003ஆம் ஆண்டு அடிப்படை கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராகவும் இருப்பதனால் அதனை இரத்து செய்யும்படி பதிவு செய்யப்பட்ட ரிட் மனு, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுக்கும்படி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இம்மனுவில் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா பதிவு செய்திருந்ததுடன், அவரே முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைத்தார்.
அவரது சமர்ப்பணங்களை ஏற்றுக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் விஜித்த மலல்கொட நீதியரசர் மற்றும் சி. துரைராஜா ஆகியோர் பிரதிவாதிகளுக்கு அழைப்புக்கட்டளை பிறப்பித்துள்ளனர். அந்தவகையில், பிரதிவாதிகளான தொழில் ஆணையாளர், மேற்குறித்த தொழிற்சங்கங்கள், முதலாளிமார் சம்மேளனம் அத்துடன் அது பிரதிநிதித்துவப்படுத்தும் 22 கம்பனிகள், தொழில் மற்றும் தொழிற்சங்க அமைச்சர், பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர், சட்டமா அதிபர் ஆகியோர் பெப்ரவரி 21ஆம் திகதி நீதி மன்றத்தின் முன் தோன்றி மனுதாரரின் மனுவில் கோரப்பட்ட நிவாரணங்களுக்கு ஏன் இடமளிக்கக்கூடாதென விளக்கமளிக்க வேண்டும்.