சத்தஞ் சந்தடியில்லாமல் கனடிய அரசு செய்த காரியம் – உலகத்தமிழர் அமைப்பின் மீதான தடை காலவரையின்றி நீடிக்கப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு சட்டவிரோதமாகப் பணச்சேர்ப்பில் ஈடுபட்ட காரணத்திற்கான தடைசெய்யப்பட்ட கனடாவில் இயங்கும் உலகத்தமிழர் அமைப்பானது, 2009ம் ஆண்டில் ஈழப் போர் முடிவுக்கு வந்த பின்னரும் தொடர்வதோடல்லாமல், கண்சவேட்டிவ் கட்சி தோற்றபிறகு பதவியேற்ற ஜஸ்ரின் ரூடோ தலைமையிலான அரசும் அத்தகைய பாணியையே கடைப்பிடித்து வருகின்றது.
இந்த வகையில் சில வாரங்களிற்கு முன்னர் இந்தத் தடையுத்தரவை பரிசீலனைக்கு எடுத்த பாதுகாப்பு அமைச்சு அந்தத் தடையை மீளப் புதுப்பித்துள்ளது. மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் தேதி நிர்ணயிக்கப்படாமல் புதுப்பிக்கப்பட்ட இந்த தடையானது எவ்வளவு காலத்திற்கு தொடர்ந்து செல்லும் என்பது தெரியாத வகையில் இந்தத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சுமார் 22 வருடங்களிற்கு முன்னர் கைது செய்யப்பட்டு நாடுகடத்த உத்தரவிடப்பட்ட சுரேஸ் மாணிக்கவாசகம் அவர்கள் நாடுகடத்தப்பட வேண்டும் என்ற முடிவை உச்சநீதிமன்றம் மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது.
இதேவேளை கனடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனா கனடாவிற்கு மிகவிரைவில் வருகை தரவுள்ளதாகவும், அவரை வரவேற்க இதே தமிழர்கள் திரளலாம் எனத் தான் எதிர்ப்பார்ப்பதாகவும் கனடாவின் முன்னணிப் பத்திரிகையொன்றின் ஆசிரியர் தனது முகப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி செய்தி வந்த பத்திரிகையில் கருத்துப் பதிவு மேற்கொண்ட பலரும், கண்சவேட்டிவ் கட்சி உலகத்தமிழர் இயக்கத்தைத் தடை செய்த போதும் சுரேஸ் மாணிக்கவாசகத்தை நாடுகடத்த முனையவில்லை என்றும், தமிழர்களின் வாக்குத் தேவையுள்ள லிபரல் கட்சி இவரை நாடு கடத்தினால் வாக்குவங்கியில் சரிவை எதிர்நோக்கலாம் என்பது போன்ற கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.