முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அவரது மறைவுக்குப் பின்னர் பதப்படுத்தப்பட்டது உண்மையே என அப்போலோ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மேலும், அவரது கால்கள் அகற்றப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அப்போலோ மருத்துவமனை மருத்துவர் பாபு ஆப்பிரஹாம், அரசு மருத்துவர் பாலாஜி, லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே ஆகியோர் விளக்கமளித்தனர்.
அப்போது, “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அவரது மறைவுக்குப் பின்னர் பதப்படுத்தப்பட்டது உண்மையே. டிசம்பர் 5-ம் தேதி இரவு 12.20 மணிக்கு பதப்படுத்தப்பட்டது. 15 நிமிடங்களுக்கு எம்பாமிங் எனப்படும் பதப்படுத்தப்படுத்துதல் நடைபெற்றது. உடலை பதப்படுத்த ஐந்தரை லிட்டர் திரவம் செலுத்தப்பட்டது. பெருந்தலைவர்கள் மறைவுக்குப் பின் அவர்களது உடல் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்பதற்காக எம்பாமிங் செய்யப்படுவது வழக்கம். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கும் கூட இதுபோல் எம்பாம்பிங் செய்யப்பட்டது” என உடற்கூறியல் துறை இயக்குநர் மருத்துவர் சுதா சேஷயன் விளக்கமளித்தார்.
மருத்துவர்கள் பாலாஜி மற்றும் ஆப்பிரஹாம் கூறும்போது, “ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்படவில்லை. இரண்டு கால்களுடன் தான் இருந்தார்.
அவர் மருத்துவமனைக்கு வரும்போது காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டுடன் வந்தார். அவருக்கு அடுத்தகட்ட சோதனைகள் மேற்கொண்டபோது அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. அடுத்ததாக அவருக்கு ரத்தத்தில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டது. செப்சிஸ் நோய் தாக்கம் உடல் முழுதும் பரவியதால் அவரது உடல் உறுப்புகள் அடுத்தடுத்ததாக செயலிழக்கத் தொடங்கின. ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை அளித்தோம். ஆனால், அவருக்கு துரதிர்ஷ்டவசமாக மாரடைப்பு ஏற்பட்டது.
அவர் சுயநினைவுடனேயே இருந்தார். அவருக்கு அவ்வப்போது மயக்க மருந்து அளிக்கப்பட்டதால் அவர் தூக்கநிலையில் இருந்தார். தேர்தல் ஆணைய நோட்டீஸில் ஜெயலலிதா சுயநினைவுடனே கைரேகை வைத்தார். கைகளில் வீக்கம் இருந்ததால் கையெழுத்திட முடியவில்லை” என்றனர்.
ரிச்சர்ட் பீலே கூறும்போது, “தமிழக அரசு கேட்டுக் கொண்டதால் ஜெயலலிதா சிகிச்சை குறித்து விளக்கமளிக்க சென்னை வந்திருக்கிறேன்.தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களை புகைப்படம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அப்படி செய்வதில்லை. ஜெயலலிதாவின் எந்த ஓர் உடலுறுப்பும் அகற்றப்படவில்லை. அவரது உள் உறுப்புகள் ஏதும் மாற்றப்படவில்லை. அவருக்கு அடிக்கடி மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர் சற்று முன்னதாகவே மருத்துவமனைக்கு வந்திருக்க வேண்டும். ஜெயலலிதாவுடன் நான் பேசினேன். அவருக்கு தொலைக்காட்சியில் என்ன பார்க்க விருப்பம் எனக் கேட்டிருக்கிறேன். அது குறித்து பேசியிருக்கிறோம். என் குடும்பத்தைப் பற்றியும் விசாரித்தார். சசிகலாவிடம் பேசினார். யாருடன் பேச வேண்டும் என்பதே அவரே முடிவு செய்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் ரிச்சர்ட் பீலே
ஆரம்பத்தில் அவரை லண்டன் அழைத்துச் செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அவரது உடல்நிலை அதற்கு ஏற்புடையதாக இல்லை. பின்னர், அவர் உடல்நிலை சற்று தேறியபின்னர் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்கு செல்வதை அவரே விரும்பவில்லை” என்றார்.
மாரடைப்பு.. எக்மோ சிகிச்சை:
“ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி மாலை 5 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது. 20 நிமிடங்களுக்கு அவருக்கு சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் இதயத் துடிப்பு சீராகவில்லை. உடனடியாக எக்மோ மருத்துவக் குழுவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 24 மணி நேரம் காத்திருந்தோம். ஆனாலும் அவரது இதயத் துடிப்பில் முன்னேற்றம் இல்லை. எக்மோ இயந்திரம் மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருந்தது. இதனையடுத்து உறவினர்களுக்கு தெரிவித்துவிட்டு எக்மோ இயந்திரம் நிறுத்தப்பட்டது” என மருத்துவர் பாபு தெரிவித்தார்.
மருத்துவ செலவு ரூ.5.5 கோடி:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கான கட்டணம் ரூ.5.5 கோடி. அந்த கட்டணத்துக்கான ரசீது உறவினர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டது” என்றார்.