(மீன்பாடும் தேனாடான்)
கடந்த கால உள்நாட்டு யுத்தத்தில் பல அரசியல் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.அதில் பல தமிழ் தலைவர்களை புலி பயங்கரவாதிகளே கொன்றனர். 2004ன் பின்னர் கிழக்கு மாகாணத்தில் புலிகள் இரண்டாக பிளவு பட்டு நின்றபோது இதுபோன்ற பல கொலைகள் இடம் பெற்றது. அப்போது தமிழ் அரசியல் தலைவர்கள் பலர் கிழக்கு மாகாணத்தில் கொல்லப்பட்டனர். குறிப்பாக 2004 பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளாராக போட்டியிட்ட இராஜன் சத்தியமூர்த்தி 2004 தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளாராக போட்டியிட்டு வென்ற பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி இராசநாயகம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசேப் பரராச சிங்கம், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு, மட்டகளப்பு தொழில் நுட்பகல்லூரி அதிபர் கைலைநாதன் என இப்பட்டியல் நீளும்.
இதில் பல கொலைகளை வன்னி புலிகளே செய்தமை பகிரங்கமான சம்பவங்கள் ஆகும். எனினும் ஒரு சில கொலைகள் கருணா தரப்பாக செயல்பட்ட கிழக்கு புலிகளாலும் செய்யப்பட்டிருக்கலாம் என்கின்ற சந்தேகங்கள் இருந்தன. இந்த நிலையில் இப்போது பத்து வருடங்கள் கழிந்த நிலையில் ஜோசேப் பரராசசிங்கத்தின் கொலை தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) சந்தேகத்தின் பெயரில் கைதாகியுள்ளார்.
பல கொலைகள் விசாரணையின்றி இன்றுவரை நீளுகையில் எதற்காக ஜோசேப் பரராசசிங்கத்தின் கொலை தொடர்பான விசாரணைகள் மட்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளன? தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களின் கொலைகள் பற்றி ஒருபோதும் இந்த விசாரணைகளை கூட்டமைப்பினர் கோருவதில்லையே?
எனவே இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பால் நிரகரிக்கபடமுடியாத அரசியல் தலைவனாக கிழக்கில் போட்டி அரசியல் செய்யும் பிள்ளையானை பழிவாங்கி அரசியலிலிருந்து விரட்டிவிட ஜோசப் பரராசசிங்கத்தின் கொலையை சம்பந்தன் போன்றோர் பயன்படுத்த முனைகின்றனர் என்பது அம்பலமாகின்றது. வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்திலும் கிழக்கு மாகாண மக்களின் குரலாக தனித்த கிழக்கை வலியுறுத்தும் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றுகுரலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று கடந்த ஜனவரி 08ம்திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போதும் பிள்ளையானை கட்சிமாறி மைத்திரியை ஆதரிக்கும்படி விலைபேசப்பட்டது. தேர்தலுக்கு மூன்று நாளைக்கு முன்புவரை மலையகத்தை சேர்ந்த சிரேஸ்ட முஸ்லிம் அமைச்சர் ஒருவர் (அவர் இன்றும் அமைச்சராக உள்ளார்) பிள்ளையானுடன் இந்த விலை பேசலில் ஈடுபட்டார்.”எனது நிலைப்பாடு சரியோ பிழையோ பணத்துக்காக நான் துரோகம் செய்ய முடியாது” என்று கறாராக அன்று பிள்ளையான் சொல்லியிருந்தார்.
தேர்தலுக்கு பின்னர்கூட ஹிஸ்புல்லாவுக்கு வழங்கப்பட்ட தேசிய பட்டியல் நியமனமும் பிரதியமைச்சர் பதவியும் முக்கிய அரசியல் நடவடிக்கை ஒன்றுக்கு பிரதியீடாக வழங்க மேலிடத்திலிருந்து பிள்ளையானுக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது.ஆனால் பிள்ளையான் அவற்றுக்கு இணங்கவில்லை.
இந்த பின்ணணிளில்தான் அதாவது இன்றைய மைத்திரி-ரணில்-சம்பந்தன் தலைமையிலான அரசாங்கத்தினது பழிவாங்கும் அரசியல் இங்கே அரங்கேற்றப்படுகின்றது என்பதே உண்மை புரிந்து கொள்ளப்படவேண்டும் . பிள்ளையானை விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துவிட்டு மட்டக்களப்பிலுள்ள பிள்ளையானின் தாயாரின் வீட்டில் புலனாய்வு துறையினர் புகுந்து அட்டகாசம் செய்துள்ளனர்.பிள்ளையானின் உதவியாளர் ஒருவர் புலனாய்வு துறையினரால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டுள்ளார்.மைத்திரி முன்மொழிந்த நல்லாட்சி இதுதானா? என்று மட்டகளப்பு மக்கள் இன்று கேள்வி எழுப்புகின்றனர்.
விசாரணை என்னும் பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்ட கொலைகளை மட்டும் முன்னிலைப்படுத்தி தங்கள் அரசியல் எதிரிகளை பழிவாங்கும் செயலுக்கு நல்லாட்சி என நாம் பெயரிட முடியாது. கடந்தகாலகொலைகள் அனைத்தும் பாரபட்சம் இன்றி விசாரிக்கப்படவேண்டும். ஆனால் காலத்துக்கு காலம் தமது அரசியை போட்டியாளர்களை எதிர்கொள்ளவும் அவர்கள் முன்வைக்கும் அரசியல் கருத்துக்களை சீரழிக்கவும் இந்த கொலைகள் மீதான விசாரணைகள் பயன்படக்கூடாது.
மீன்பாடும் தேனாடான்