ஜெர்மனி அகதிகளை ஏற்றுக் கொள்வதில் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொள்வதாக, ஜெர்மனியைப் புகழும் பல கட்டுரைகள் தமிழகப் பத்திரிகைகளில் வந்திருந்தன. பல நண்பர்கள் அவற்றை சுட்டிக் காட்டி, உண்மை நிலவரம் என்னவென்று கேட்டிருந்தார்கள். வழக்கம் போலவே, ஊடகங்கள் தெரிவிப்பதற்கும், உண்மை நிலவரத்திற்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.
பிரிட்டனை விட ஜெர்மனி பெருமளவு அகதிகளை ஏற்றுக் கொள்கின்றது என்பது உண்மை தான். பெரும்பாலான தமிழர்கள், காலனிய அடிமைத்தனம் காரணமாக பிரிட்டனுக்கு செல்ல விரும்பினாலும், ஜெர்மனியில் அகதிகளுக்கான வசதி வாய்ப்புகள் அதிகம் என்பதை மறுப்பதற்கில்லை.
முதலில், மேற்கு ஐரோப்பிய நாடுகள் தஞ்சக் கோருவோரை அகதிகள் என்று அழைப்பதில்லை என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் வெறும் “தஞ்சக் கோரிக்கையாளர்கள்” மட்டும் தான், அகதிகள் அல்ல. விசாரணைகளின் பின்னர், பெருமளவு அகதிகளின் தஞ்சக் கோரிக்கைகள் நிராகரிக்கப் படும். அவர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என்று வற்புறுத்தப் படுவார்கள். மீறி இருந்தால், சட்டவிரோதிகள் ஆக்கப் படுவார்கள்.
ஆயினும், விண்ணப்பம் பரிசீலிக்கப் படும் வரையில், தற்காலிகமாக வசிப்பதற்கு ஏற்ற வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறார்கள். அகதிகள் தங்குவதற்கான தற்காலிக இருப்பிடங்கள் வசதிகளற்ற முகாம்கள் ஆகும். அவை பெரும்பாலும் நகரங்கள், கிராமங்களில் இருந்து தொலைவில் இருக்கும்.
சிலநேரம், பழைய சிறைச்சாலைகளில் கூட, அகதிகளை தங்க வைக்கிறார்கள். நகரங்களில் புதிதாக வரவிருக்கும் அகதி முகாம்களுக்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பது ஆங்காங்கே நடக்கிறது. சில இடங்களில், அகதிகள் குடியேறுவதற்கு முன்னரே கட்டிடங்களுக்கு தீ வைத்துள்ளனர்.
மேலும், சில தவிர்க்கவியலாத காரணங்களினால் தான், பெருமளவு அகதிகளை நாட்டுக்குள் வர விட்டனர். ஆனால், எல்லைகளில் சோதனைகள் தீவிரமடைந்ததன. அகதிகளை கடத்திக் கொண்டு வருவோர் பலர், நூற்றுக்கணக்கில் கைது செய்யப் பட்டனர். பெரும்பாலான அகதிகள் ஜெர்மனியை நோக்கி வந்தாலும், விரைவில் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினாலும் பங்கிடப் படவுள்ளனர். பிற ஐரோப்பிய நாடுகளை அவ்வாறு செய்வதற்கு ஜெர்மனி வற்புறுத்தி வந்துள்ளது.
அது மட்டுமல்ல, இனிமேல் புதிதாக அகதிகள் வருவதை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன. துருக்கி மூலமாக பெருமளவு அகதிகள் வந்த படியால், அந்த நாட்டுடன் சில ஒப்பந்தங்களைப் போட்டுள்ளனர். அதன் படி, துருக்கியில் உள்ள அகதி முகாம்களில் வசதிகள் அதிகரிக்கப் படும்.
அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் துருக்கி மொழி கற்பதற்கும், வேலை வாய்ப்பிற்கும் வழி ஏற்படுத்திக் கொடுக்கப் படும். இதற்காக மில்லியன் கணக்கான யூரோக்களை, ஐரோப்பிய ஒன்றியம் செலவிடவுள்ளது. அதன் அர்த்தம், துருக்கி அகதிகளுக்கான பாதுகாப்பான நாடாக அறிவிக்கப் பட்டுள்ளது. இனிமேல் ஓர் அகதி துருக்கி வந்த பின்னர், பிற ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம் கோர முடியாது.
(Kalaiyarasan Tha)