(மாதவன் சஞ்சயன்)
அண்மையில் இணையத்தளம் ஒன்றிற்கு வட மாகாண சபை முதல்வர் கொடுத்த பேட்டியில், வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு முதல்வர், தற்சமயம் அது சாத்தியம் இல்லை. இந்தியா தலையிட்டு ஸ்ரீலங்கா வை சம்மதிக்க வைத்தால் அது சாத்தியம் என கூறினார். 1987ல் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வடக்கும் கிழக்கும் தமிழ் பேசும் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்த பிரதேசங்கள், என்ற விடயம் பந்தி 1-4 ல் உள்ளது. அதனை உள்ளடக்க ஜே ஆர் சம்மதம் பெற இந்தியா செய்த விட்டுக் கொடுப்பே, பந்தி 2.3ல் உள்ள 31-12-19988 க்கு முன் வடக்குடன் தொடர்ந்தும் இணைந்து இருக்க வேண்டுமா என, கிழக்கில் மட்டும் அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தும் விடயம். அதுவரை அவை இரண்டும் ஜே ஆர் ஆல் தற்காலிகமாக இணைக்கப்பட்டன.
நிரந்த இணைப்பை விரும்பாத ஜே ஆர் வகுத்த சூத்திரம் அது. கிழக்கில் மட்டும் வாக்கெடுப்பு என்றால், கிட்டத்தட்ட மூவினமும் சமமாக வாழும் அந்த மாகாணத்தில் உள்ள சிங்களவருடன் முஸ்லிம்களும் இணைந்தால், நிரந்தர இணைப்பை தடுக்கலாம் என அவர் கணக்குப் போட்டார். நான் இணைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன் என பகிரங்கமாகவும் அறிவித்தார். தற்காலிக இணைப்பை வர்த்தமானி அறிவிப்பில் தான் செய்தார். அந்த நேர சூழல் ஜே ஆர் க்கு சாதகமாக இருந்தது. அதுவரை தென்னிலங்கை கட்சி அல்லது தமிழ் கட்சிகளில் போட்டியிட்ட முஸ்லிம் மக்கள் மத்தியில் கிழக்கில் உதயமான முஸ்லிம் காங்கிரசும் அதன் மர சின்னமும் பெரும் எழுச்சி கண்ட நேரம். அது மர்கூம் அஸ்ரப் அவர்களின் நீண்ட நாள் கனவு.
அமிர்தலிங்கத்தின் தலைமையில் அரசியல் தடம் பதித்த மர்கூம் அஸ்ரப், அமிர் கூட தமக்கு சரியான அங்கீகாரம் தரவில்லை என்ற மனக் குறையில் அது வரை தனிக்கட்சி, தலைமைத்துவம் இல்லாது இருந்த முஸ்லிம்களுக்காக கிழக்கில் உதித்து, தெற்கு நோக்கி பயணிக்க தொடங்கிய காலம். பிரித்தாளும் தந்திரி ஜே ஆர் இதை வைத்தே அபிப்பிராய வாக்கெடுப்பை, கிழக்கில் மட்டும் நடத்தும் திட்டத்தை வகுத்தார். புலிகளுடன் குத்தி முறிவதில் முனைப்பாக இருந்த இந்தியாவிடம் இந்த விடயம் எம்மவரால் எடுக்கப் பட்டபோது, இந்தியா பெரியண்ணன் தோரணையில் அபிப்பிராய வாக்கெடுப்பை நடக்க விடமாட்டோம் என கூறி, வருடா வருடம் ஒத்தி வைக்கப்பட்டு, மகிந்த அரசு வந்தபின் நீதிமன்றால் அது துண்டாடப்பட்டது.
அப்போது கூட மகிந்த, மன்மோகன் சிங் கிடம் நான் நாடு திரும்பியதும் நீதித் துறையில் தலையிட்டு அவ்வாறு நிகாழாமல் செய்வேன், என கூறிவிட்டு பின் அது நிகழ்ந்த போது இந்தியாவால் என்ன செய்ய முடிந்தது. அப்போது பதுங்கிய இந்தியாவை இப்போது பாயச் சொல்கிறார் முதல்வர். அவர் கூறிய ஒரு விடயத்தில் எனக்கு மாற்று கருத்து இல்லை. இன்றைய சூழ்நிலையில் இணைப்பு முஸ்லிம் மக்களின் மனநிலை காரணமாக சாத்தியமில்லை. காரணம் ஜே ஆர் மகன் ரவி தலைமையில் உருவாகி, மொசாட் உளவுப் பிரிவால் பயிற்றப்பட்ட விசேட அதிரடிப் படையினர், சில முஸ்லிம்களை தூண்டி நடந்த, காரைதீவு வீரமுனை சம்பவங்களை தொடர்ந்து சில தமிழர்களும், போராளிகளின் துணையுடன் முஸ்லிம்களுக்கு செய்த செயல்கள்.
1986 ல் சிறு தீயாய் கனன்றது பின்பு பெரும் தீயாக மாறி இருக்காவிட்டால், வடக்குடன் இணைய கிழக்கு முஸ்லிம்கள் இணங்கி இருக்கலாம். அல்லது கிழக்கு மாகாண சபையை ஆளும் தலைமையாக அவர்கள் மாறும் சந்தர்ப்பம், ஏற்பட்டிரா விட்டாலும் அவர்கள் சம்மதித்து இணைந் திருக்கலாம். அல்லது ஹிஸ்புல்லா, அதாவுல்லா போன்ற கிழக்கின் தலைவர்கள் மகிந்தவுடன் கூட்டில் இல்லாது முஸ்லிம் காங்கிரசில் இருந் திருந்தால், தனக்கு சம்மந்தரால் விடப்பட்ட அழைப்பை ஏற்று, ஹக்கீம் கிழக்கு மாகாண சபையை தமிழ் முஸ்லிம் கூட்டில் அமைத்து காலப் போக்கில் அது சாத்தியமாகி இருக்கலாம். இன்று இருக்கும் கிழக்கு மாகாண சபை, தமிழ் முஸ்லிம் உறவை வளர்க்க நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பதே யதார்த்த நிலை.
கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் மட்டுமல்ல தமிழர்களில் கணிசமானவர் புலிகள் பிளவின் பின், பிள்ளையான் முதல்வர் ஆன பின், வடக்குடன் தொடர்புகளை பேணினாலும் இணைவதற்கு காலம் எடுக்கும். காரணங்களை சத்தியமூர்த்தி கொலை முதல் வாகரை சம்பவங்கள் வரை தேடினால் அறிய முடியும். இந்த நிலையில் இந்தியா நினைத்தால் இணைக்க முடியும் என்ற பதில், மணிகட்டின மாடு சொன்னால் சரிவரும் என்பது போல உள்ளது. உண்மையில் முதலில் அங்கு வாழும் மக்களின் மனதை வெல்லவேண்டும். எமக்குள் நல்லிணக்கம் ஏற்படக் கூடிய நம்பிக்கை அவர்களுக்கு ஊட்டப்படவேண்டும். மூத்த அனுபவப்பட்ட நீண்ட நாள் அரசியலில் இருக்கும் சம்மந்தர் அதை தான் செய்ய முற்படுகிறார். தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து செயப்பட வேண்டும், வடக்கும் கிழக்கும் ஒருங்கிணைவதில் உள்ள தடைகள் நீக்கப் படவேண்டும் என்பதே, அவரின் செயல்ப்பாடாக இருக்கிறது.
இதே கேள்விக்கு சில வாரங்களுக்கு முன் சுமந்திரன் கூறிய பதிலை உங்கள் ஆய்வுக்கு வைக்கிறேன். அவரும் இப்போது உள்ள அரசியல் அமைப்பு சட்டவிதி பிரகாரம் அது சாத்தியமில்லை. ஏனென்றால் அருகருகே இருக்கும் இரண்டு மாகாண சபைகள் விரும்பினால் அவர்கள் தமக்குள்ள தீர்மானம் நிறைவெற்றி இணையலாம் என கூறப்பட்டிருந்தாலும், வடக்கும் கிழக்கும் இணைவதென்றால் கிழக்கில் மட்டும் ஒரு அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனவே அதனை சாத்தியமாக்க புதிதாக வரையப்படும் யாப்பில் அந்த பதத்தை நீக்கினால், இணைப்பு சாத்தியமாகும் என்றார். மாற்றம் நல்லாட்சியில் நடக்கும் என்ற நம்பிக்கையில் அவர் கூறிய அந்தப் பதிலா, அல்லது இந்திய நாட்டாமை கூறினால் நடக்கும் என்ற முதல்வர் பதிலா ஏற்புடையது? தயவு செய்து முதல்வரா சுமந்திரனா கூடப் படிச்சது எண்டு சுவிஸில் மாவையிடம் கேட்ட கேள்வியை என்னிடம் கேட்க வேண்டாம்.
அண்மைக்காலமாக தணிகின்ற தணலை கிளறி தீயாக பரவும் செயலைப் புரிபவர் தன் தலையங்கம் மூலம் சங்கூதி மீண்டும் ஒரு அசாதாரண நிலைமை ஏற்பட்டு, எம்மவர் மீண்டும் கந்தறு நிலைக்கு திரும்பவா? வலம் வருகிறார் என்ற கேள்வி எழுகிறது. சம்மந்தர் எடுக்கும் முடிவுகளை விமர்சிக்கும் அவர், அவருக்கு மாற்றாக கிழக்கிடம் இருந்து வடக்கு தலைமையை ஏற்க வேண்டும் என்பார். பின் சுமந்திரன் எதையாவது செய்ய முற்ப்பட்டால் கொழும்பு தமிழ் தலைமயின் செயலை தடுக்க, முதல்வர் தலைமையில் அணிதிரள்க என ஆலோசனை கூறுவார். அவருக்கு தெரியும் முதல்வர் அண்மையில் நான் ஒரு கொழும்பு வாசி, முதல்வரான பின்பு தான் உத்தியோக பூர்வ இல்லத்தில் வாழும் யாழ் வாசி என ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்தது.
தெற்கின் சதிவலை வடக்கையும் கிழக்கையும் நிலத்தை வைத்து பிரித்தது என்றால், இவர்கள் போன்றவர் யாழ் வன்னி கிழக்கு மலையகம் கொழும்பு என 1983 க்கு முன்பிருந்த நிலைக்கு தமிழ் பேசும் மக்களை தள்ளப் பார்க்கின்றனர். ஆயுதங்களை கையேந்த தூண்டப்பட்ட எந்த இளைஞனுக்கும் தன் தோள் உரசுபவன் உண்மைப் பெயர் தெரியாது, ஊர் தெரியாது, பிராந்தியம் தெரியாது, சாதி தெரியாது, சமயம் தெரியாது. அவனுக்கு தெரிந்தது யாழில், கிளிநொச்சியில், முல்லைத்தீவில், வன்னியில், மன்னாரில், திருமலையில், மாட்டக்ளப்பில், அம்பாறையில் எதிரியின் முகாங்களும் அவர்கள் எமக்கு எதிராக புரியும் அராஜகங்களும் மட்டுமே. அண்ணா, அக்கா, நண்பா, தோழர் என பாசம் காட்டியவரை, தமக்குள் மோதச் செய்ததும் இவர்கள் போன்ற ஈனப் பிறவிகளின் எழுத்துத் தான். அந்த எச்ச சொச்சங்கள் தான் மீண்டு எம்மவருள் பிளவை ஏற்படுத்த, கச்சை கட்டி களம் இறங்கி உள்ளனர்.
புதிய அரசு வந்ததும் வரிந்து கட்டிக்கொண்டு இந்திய அரச தலைவரை சந்தித்தபோது, பொறுமையாய் பழையதை கேட்ட அவர் கொடுத்த ஆலோசனை முதலில் நீங்கள் ஒன்றுபடுங்கள், வடக்கு கிழக்கு மட்டுமல்ல மலையகத்தையும் கணக்கில் எடுங்கள் என்பதே. எங்கு சென்றாலும் உள்நாட்டில் பேசித் தீருங்கள் என்றே கூறப்படுகிறது. இனப்படுகொலை என தீர்மானம் நிறைவேற்றினால் சர்வதேசம் பார்த்துக்கொள்ளும் என்பவர்கள், அது நடந்தபோதும் சர்வதேசம் பார்த்துக்கொண்டு இருந்ததை அறிவர். அப்போதைய சர்வதேசத்தின் விருப்பு புலிகளின் அழிவு. அதனால் ஸ்ரீலங்கா என்கிற நாட்டில் நடந்த அத்தனைக்கும், அவர்கள் தரும் மாற்று மருந்தை மட்டுமே பாவிக்க முடியும். மக்களை ஏமாற்றவே இவர்களின் தீர்மானங்களும் அறிக்கைகளும்.
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் முடிவில் தர்மமே வெல்லும். நம்புங்கள் சிலு சிலுப்பைகள் சத்தம், பலகாரம் வெந்தால் அடங்கும்.
-மாதவன் சஞ்சயன்-