மகன் தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு…..

 

நான் வாழும் ரூஜ்பார்க் ‌தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகப் போட்டியிட நியமனம் கோரிய Gaரி ஆனந்தசங்கரி லிபரல் உட்கட்சித் தேர்தலில் வெற்றியடைந்திருக்கிறார். (இனி 2015இல் வரப்போகும் பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் அவர் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும்.) அவரது நியமனத் தேர்தல் நடந்த மண்டபத்திற்குப் போயிருந்தேன். தமிழ்கனடாவின் பெரும்புள்ளிகள் மட்டுமல்ல லிபரல் தமிழ்ப் பொது மக்களும் பெருமளவில் வந்திருந்தார்கள் ஏற்கனவே சூடு பிடித்திருந்த இந்த உட்கட்சித்தேர்தல் கடைசிவரை விறுவிறுப்பாகவே போய் முடிந்தது. Gaரியின் வெற்றி முடிவு அறிவிக்கப்பட்டதும் வந்திருந்தவர்களிடையே ஏற்பட்ட ஆரவாரத்தை ரசிக்க முடிந்தது. புதிய அரசியல் உலகம் தெரிகிறது…

Gaரியைத் தோற்க வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு உலகத்தமிழர் இயக்கத்தினர் வேலை செய்தபடியால்தான் Gaரிக்கு இன்னும் பலமாக ஆதரவு அலை வீசியிருந்திருக்க வேண்டும். உலகத்தமிழர் இயக்கத்தினர் Gaரியை எதிர்த்திருக்காவிட்டால் இந்த அளவிற்கு மக்கள் ஆதரவு Gaரிக்குக் கிட்டியிருக்காது.

லிபரல்கள் ஊடாக ஒரு புதிய இளம் தமிழ்த் தலைமை கனடாவில் தமிழர்களுக்கு உருவாகியிருப்பதுபோன்ற தோற்றப்பாடு அனைவர் மனதிலும் இப்போது வேரூன்றி விட்டிக்கிறது. இது விடுதலைப் புலிகளும் உலகத்தமிழர் இயக்கமும் சேர்ந்து ஏற்கனவே உருவாக்கி வைத்திருநத அரசியல் வெற்றிடத்தால் ஏற்பட்டதேயன்றி வேறில்லை.. இனியாவது படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.

Gaரி வென்றதாக அறிவிக்கப்பட்டாலும் எனக்கென்னவோ ”Gaரியின் தந்தை வீ. ஆனந்த சங்கரிதான் வென்றிருக்கிறார்” என்றே தோன்றுகிறது. காரணம்??? இத்தேர்தல் பிரச்சாரத்தின்போது அப்பா ஆனந்தசங்கரியைத் “துரோகி” “துரோகி” என்று சொல்லித்தான் மகன் ஆனந்தசங்கரியை டிஸ்க்கிரடிட் பண்ணியது உலகத்தமிழர் இயக்கம். ஆனால் “இந்தக் கதையை இனி இங்கு விடாதே அப்பனே…” என்று உலகத்தமிழர் இயக்கத்திற்கு ஸ்காபரோ ரூஜ்பார்க் ‌தொகுதித் தமிழர்கள் சொல்லிவிட்டார்கள்…

கிளிநொச்சியை விடுதலைப்புலிகள் ஒருகாலத்தில் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததுபோல உலகத்தமிழர் இயக்கம் ரொன்டோவை ஒருகாலத்தில் கட்டுப்பாட்டில் வைத்திருந்து. இப்போது அந்த வரலாறு முடிவுக்கு வருகிறது. இனி “அவர்கள்” இந்தக் கிளிநொச்சியை கட்டுப்படுத்த முடியாது..

காரணம் அன்றைய கிளிநொச்சி எம்பியின் மகன்தானே இன்றைய Gaரி…!!! இதைக் Gaரியும் புரிந்து கொள்ள வேண்டும்:
“மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்”

பொழிப்பு: மகன் தன் தந்தைக்குச் செய்யும் கைம்மாறு, `இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ’ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

(Narayana Moorthy)