(கே.கே.மகேஷ்)
தமிழகத்தின் வற்றாத ஜீவநதியாக தாமிரபரணி இருக்கிறதென்றால், பொதிகை மலை உள்ளிட்ட மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகள் மிகச்சிறப்பாக பாதுகாக்கப்படுவதே காரணம். இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 23,000 ஹெக்டேர் பரப்பு கொண்ட, சிங்கம்பட்டி ஜமீன் காட்டை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிப்பதற்கு தமிழக வனத்துறை முயற்சித்தது. ஆனால், அந்த முயற்சிக்கு 40 ஆண்டாகத் தடையாக இருந்தது ‘மாஞ்சோலை எஸ்டேட் டீ’ நிறுவனம். தற்போது அந்த நிறுவனத்தைச் சட்ட ரீதியாக வென்றிருக்கிறது வனத்துறை.
சிங்கம்பட்டி காட்டில் சுமார் 8,400 ஏக்கர் நிலத்தை 1929ம் ஆண்டு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (BBTC) நிறுவனத்திற்கு 99 வருடக் குத்தகைக்கு விட்டார் அப்போதைய சிங்கம்பட்டி ராஜா. எதற்காக அப்படி குத்தகைக்கு விட்டார் என்பது ஒரு சோகக்கதை. 1918ம் ஆண்டு அன்றைய சிங்கம்பட்டி ஜமீன் (இன்றைய ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் தந்தை), சென்னையில் படித்துக்கொண்டிருந்தபோது ஒரு கொலை வழக்கில் சிக்கினார். வழக்கிற்கு அதிகச் செலவானதால், அதைச் சமாளிப்பதற்காக சொத்து, பத்துக்களை விற்க ஆரம்பித்தது ஜமீன் குடும்பம். அதன் ஒரு பகுதியாக 23,000 ஹெக்டேர் பரப்பு கொண்ட ஜமீன் காட்டில், 8,400 ஏக்கர் காட்டு நிலத்தை 99 வருடக் குத்தகைக்கு விட்டார் ஜமீன். நிலத்தை குத்தகைக்கு எடுத்த அந்நிறுவனம் காட்டை அழித்து, தேயிலைத் தோட்டங்களை உருவாக்கியது. தற்போது இந்த வழக்கில் வெற்றிபெற்றுள்ள தமிழக வனத்துறை, இந்த நிலத்தை எல்லாம் மீட்க அரசாணையும் (12.1.2018) பிறப்பித்துள்ளது. இதற்காக உழைத்த ஓய்வுபெற்ற வன அதிகாரிகள் தொடங்கி, தற்போதைய அதிகாரிகள் வரையில் அனைத்து வனத்துறையினருக்கும் பாராட்டு குவிகின்றன.
வருஷநாடு ஜமீன் காடு?
‘வருஷநாடு ஜமீன்’ என்பது தேனி மாவட்டத்தில் உள்ள ‘கண்டமநாயக்கனூர் ஜமீனையே’ குறிக்கும். மதுரையில் இருந்து தேனி செல்கிற தேசிய நெடுஞ்சாலையில் க.விலக்கு என்றொரு இடம் வருகிறதல்லவா? அது கண்டமனூர் அல்லது கண்டமநாயக்கனூர் ஜமீனுக்கு செல்லும் பிரிவே. (இந்த இடத்தில், ‘கண்டமனூர் ஜமீன் என்னைய கண்டம் பண்ணிட்டாரு’ என்ற வடிவேலு காமெடி நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது).
விஷயத்துக்கு வருவோம். வைகை ஆறு வறண்டு கிடப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று வருஷநாடு, மேகமலை பகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டதுதான். மிச்சமிருக்கும் பசுமையும்கூட, எஸ்டேட்களாகவே உள்ளன. எஸ்டேட்களை ‘பச்சைநிற பாலைவனம்’ என்றே அழைக்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள். காரணம், அவை பசுமையாக இருந்தாலும் காட்டுயிர்களுக்கோ, நீர்வளத்திற்கோ, மழைப்பொழிவிற்கோ உதவுவதில்லை என்பது அவர்களது கூற்று. எப்படி வருஷநாடு மற்றும் மேகமலையில் இவ்வளவு எஸ்டேட்கள் வந்தன என்று ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டோம்.
ஜமீனை ஏலம் விட்ட ஆங்கிலேயர்கள்!
“சுற்றுப்பட்டு 64 கிராமங்கள் மட்டுமல்ல, வருஷநாடு, மேகமலை காடுகளில் கேரள எல்லை வரைக்கும் உள்ள நிலம் அனைத்தும் வருஷநாடு (கண்டமனூர்) ஜமீனுக்குச் சொந்தமானது. எல்லா ஜமீன்களையும் போலவும் ஆடம்பரச் செலவு, வம்பு வழக்கு என்று சிக்கி சொத்தை எல்லாம் இழந்தார்கள் ஜமீன் குடும்பத்தார். கடைசி காலத்தில் வெள்ளையர்களுக்கு கப்பம் கட்ட முடியாத அளவுக்கு கடன்பட்டார்கள். இதனால், ஜமீனையே ஏலம் விட முடிவு செய்தது ஆங்கிலேய அரசு. இந்தியாவின் விலைமதிப்பற்ற கலைப்பொக்கிஷங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதைத் தொழிலாக வைத்திருந்த ரஸ்டன்சிபாய் பட்டேலும் அவரது சகோதரர்கள் 3 பேரும் சேர்ந்து ஜமீன் காட்டை ஏலம் பெற்றனர். பல லட்சம் ஏக்கர் பரப்புள்ள வனத்தை அவர்கள் எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்கள் தெரியுமா? வெறும் ஐந்தரை லட்ச ரூபாய்க்கு!
இது நடந்தது 1922. இதன் பிறகுதான் மலைக்குள் காடுகள் அழிக்கப்பட்டு எஸ்டேட்கள் உருவாக்கப்பட்டன. தற்போது மேகமலையில் உள்ள எஸ்டேட்களின மொத்தப்பரப்பு மட்டும் 62 ஆயிரம் எக்டேர். டாடா குமுமம் முதல் உள்ளூர் செல்வந்தர்கள் வரையில் பலருக்கும் காட்டுக்குள் எஸ்டேட் இருக்கிறது. இந்த எஸ்டேட்களுக்கு அதன் உரிமையாளர்கள், ஊழியர்கள் உள்பட யார் செல்வது என்றாலும் வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். ஆனால், எஸ்டேட்டுக்குள் அவர்கள் வைத்தது தான் சட்டம். வைகை ஆற்றுக்கு தண்ணீர் வருகிற பல சிற்றோடைகள் இந்த எஸ்டேட்களைக் கடந்துதான் வர வேண்டும். அனைத்து சிற்றோடைகளையும் மறித்து தண்ணீரை எஸ்டேட்களுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த எஸ்டேட்களையும் மீட்டால்தான் வைகை ஆறு உயிர்ப்பெறும். அதற்கு சட்டரீதியாகப் போராட வனத்துறையுடன் சேர்ந்து தமிழக அரசும் முயற்சிக்க வேண்டும். அண்டை மாநிலத்துக்குள் உள்ள பெரியாறு தண்ணீரைப் பெறுவதற்காக போராடும் தமிழக அரசியல் கட்சிகள், நம்முடைய எல்லைக்குள் இருக்கும் வருஷநாடு, மேகமலைக்காடுகளைப் பாதுகாக்கக் கோரி போராட்டம் நடத்துவதில்லை. பெரியாறு தண்ணீருக்காகப் போராடும் விவசாயிகளில் 10% பேர் கூட, வைகையை மீட்டுத்தாருங்கள் என்று குரல் கொடுப்பதில்லை என்பது இயற்கை ஆர்வலர்களின் வருத்தம்.
விலைக்கு வாங்கலாமே?
மேகமலை வனப்பகுதியை விரிவுபடுத்த சில யோசனைகளையும் முன்வைக்கிறார் வனத்துறை அதிகாரி ஒருவர். “பெரியாறு வனப்பகுதியிலும் ஆங்கிலேயர் காலத்தில் இருந்து ஒரு தனியார் எஸ்டேட் இருந்தது. வன உயிரினங்களுக்கும், வனத்திற்கும் கெடுதலாக இருந்த அந்த எஸ்டேட்டை கைப்பற்ற கேரள வனத்துறை தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டது. எஸ்டேட்டுக்குள் புதிதாக பயிர் செய்யவும், மரங்களையும் களைகளையும் வெட்டவும் அனுமதி கொடுக்க மறுத்தது வனத்துறை. ஒரு கட்டத்தில் எஸ்டேட்டே காடு மாதிரி மாறிவிட்டது. அதிகாரிகளின் தொல்லை தாங்காமல், எஸ்டேட்டை கை கழுவிவிட அதன் உரிமையாளர்களே முடிவெடுத்தார்கள். ‘அப்படியா மிக்க மகிழ்ச்சி’ என்று வனத்துறையே அரசு பணத்தில் அந்த எஸ்டேட்டை விலைக்கு வாங்கி, காட்டுடன் இணைத்துவிட்டது. மேகமலை வனப்பகுதியிலும் இப்படி கைவிடப்பட்ட எஸ்டேட்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை தமிழக அரசே விலைக்கு வாங்கி, வனத்துடன் இணைக்க வேண்டும்” என்கிறார் அவர்.
அமைச்சர் என்ன சொல்கிறார்?
இந்தப் பிரச்சினை குறித்து கருத்துக் கேட்பதற்காக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனைத் தொடர்பு கொண்டோம். என்ன விஷயம் என்பதை முழுமையாக கேட்டுத் தெரிந்துகொண்ட பின்னரே, அவரது உதவியாளர் அமைச்சரிடம் போனைக் கொடுத்தார். “மாஞ்சோலை எஸ்டேட் நிலம் மீட்கப்பட்டதற்கு பாராட்டுக்கள் அண்ணே. வாழ்த்துக்கள். அதேபோல, நமது வைகை ஆற்றின் முக்கிய நீராதாரமாகத் திகழ்கிற வருஷநாடு, மேகமலையில் உள்ள எஸ்டேட் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று கேட்டேன்.
“தம்பி… தம்பி… நிப்பாட்டுங்க. இப்படி நீளமா கேள்வி கேட்டா நான் எப்படி பதில் சொல்றது. உங்க வயசு என்ன என் வயசு என்ன நேர்ல வந்து பார்க்கலாம்ல. இல்லைன்னா, கேள்வியை மெயிலில் அனுப்புங்க பதில் சொல்கிறேன்” என்றார் அமைச்சர்.
“இல்லண்ணே, ஏற்கெனவே வைகையின் மூலத்தில் உள்ள காடுகளின் இன்றைய நிலை பற்றியும், தேனி மாவட்ட எல்லைக்குள் கேரள வனத்துறையினர் எல்லைக்கல் நட முயன்ற பிரச்சினை பற்றியும் பேசினேன். கேள்விகளை மின்னஞ்சலில் அனுப்பச் சொன்னீர்கள். ஆனால், அதற்கு இன்னமும் பதில் வரவில்லையே” என்றேன்.
“இந்த முறை அனுப்புங்க தம்பி. பத்திரிகையாளர்களுக்கு கொஞ்சம் இடம் கொடுத்தால், ரொம்பப் பேசுறீங்களே?” என்று இணைப்பைத் துண்டித்தார் அமைச்சர்.
அமைச்சரின் மின்னஞ்சல் முகவரிக்கு கேள்விகள் அனுப்பப்பட்டுள்ளன. காடுகளை மீட்க, நடவடிக்கை எடுப்பாரா அமைச்சர்?
(The Hindu)